திருவள்ளூர்: நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் என்ற தேர்தல் திருவிழா களைகட்டி வருகிறது. இந்த நிலையில், வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, கட்சிகளின் முக்கிய பிரதிநிதிகள், தலைவர்கள், நட்சத்திரப் பேச்சாளர்கள் என அனைவரும் அதிரடி வாக்கு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார். அந்த வகையில், நேற்று மாலை 4 மணியளவில் திருவள்ளூர் தனித் தொகுதி தேமுதிக வேட்பாளர் கு.நல்லதம்பியை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.
முன்னதாக, திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி அருகே நடைபெற்ற இக்கூட்டத்தில் பங்கேற்க வந்த எடப்பாடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, புரட்சி பாரத கட்சியின் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி வாக்கு சேகரித்தார்.
அதையடுத்து மேடையில் பேசிய எடப்பாடி பழனிசாமி, "தேமுதிகவின் வெற்றி வேட்பாளர் நல்லதம்பிக்கு முரசு சின்னத்தில் வாக்களித்து மாபெரும் வெற்றி பெறச் செய்ய வேண்டும். அதிமுக கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் நிராகரித்த அரசு விடியா திமுக அரசு. வெளிநாட்டிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து, பெட்ரோல் விலையை உயர்த்தி மக்களை வஞ்சிக்கிற அரசு, மாநில அரசு.
திமுக அரசு எங்களுடைய திட்டங்கள் அனைத்தையும் நிராகரித்துவிட்டது. சென்ற இடத்தில் எல்லாம் எடப்பாடி பழனிசாமி துப்பாக்கிச்சூடு நடத்தினார் என்று கூறி வருகிறார் மு.க ஸ்டாலின். இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு காரணமே பல அரசியல் கட்சிகள் தான். திமுக ஆட்சியில், கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது, விவசாயிகளுக்கு பம்புசெட்டுக்கு மின் கட்டணத்தில் 1 ரூபாய் குறைக்க வேண்டும் என்று தமிழ்நாடு முழுவதும் விவசாயச் சங்கம் ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.
அப்பொழுது, கோவையில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது திமுக. விவசாயிகளைக் குருவி சுடுவது போல் சுட்டது திமுக அரசு. அந்த போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளின் குடும்பங்கள் வறுமையில் இருந்ததால், ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது அந்த துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்ட விவசாயக் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் கொடுத்தார்.
திருநெல்வேலி மாவட்டம், மாஞ்சோலை தேயிலைத் தோட்டம் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு உயர்த்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் சந்திக்க ஊர்வலமாகச் சென்ற போது அவர்கள் மீது கடுமையான தடியடிகள் நடத்தி, அவர்கள் உயிருக்குப் பயந்து அருகில் ஓடிக் கொண்டிருக்கும் தாமிரபரணி ஆற்றில் விழுந்து 18 பேர் உயிரிழந்தனர். ஏனென்றால் திமுக ஆட்சியிலும் பல துப்பாக்கிச் சூடுகள் நடைபெற்றுள்ளது என்பதைச் சட்டமன்றத்தில் பதிவு செய்துள்ளேன்.
ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்ய ரூ.1500 கோடி ஒதுக்கீடு செய்வது குறித்து ஸ்டாலின் சட்டமன்றத்தில் பேசினார். ஆலை விரிவாக்கம் செய்வதில் திமுக அரசு துணை போனது, ஆனால் ஸ்டெர்லைட் ஆலையை மூடப்பட்டது அதிமுக ஆட்சியில். திமுக ஆட்சியில் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை உள்ளிட்டவை தினந்தோறும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பிரமாண்ட மருத்துவக் கல்லூரி அதிமுக ஆட்சியில் தான் கொண்டுவரப்பட்டது. எனவே முரசு சின்னத்திற்கு வாக்களியுங்கள்" எனத் தெரிவித்தார்.