சென்னை: சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "காவிரி நதிநீர் பிரச்சனை குறித்து கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தேன். உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் படி, ஆணையத்தின் பணிகள் வரையறுக்கப்பட்டுள்ளது.
அதாவது, காவிரி நதிநீரைத் தேக்குதல், பகிர்தல், பாசன மற்றும் இதர தேவைகளுக்கு வழங்குதல் இவற்றைத் தவிர வேறு விவரங்கள் குறித்து விவாதிக்க ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை. ஆணையத்தின் பணி வரம்பை மீறி 28வது மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகத்தாது விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. இவற்றிற்குத் தமிழ்நாட்டு அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை.
ஆணையம், மேகதாது அணை விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்ட விவரங்களை மத்திய நீர் வள கமிஷனுக்கு அனுப்பி உள்ளது. இந்த அரசு இதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. சட்டமன்றத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றி. உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்க வேண்டும். அதையும் இந்த அரசு செய்யவில்லை.
ஒரு வேலை மேகத்தாது அணை கட்டப்பட்டுவிட்டால் மேட்டூர் அணை வறண்டு விடும், ஆனால் இந்த அரசு உரிய கவனம் செலுத்தாமல் அலட்சியத்துடன் உள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம் அதிகாரத்தை மீறியுள்ளனர். மேகதாது விவகாரத்தில் வேகமாக, இந்த அரசு துரிதமாகச் செயல்படாமல் மெத்தனமாக உள்ளது" என்றார்.
முன்னதாக, காவிரி மேலாண்மை ஆணை 28வது கூட்டத்தில் மேகதாதுவில் அணைகட்டுவது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரமில்லா நேரத்தில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார். இதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் துரைமுருகன், உச்ச நீதிமன்றத் தீர்ப்பே இறுதியானது, பிப்ரவரி 1ஆம் தேதி ஆணையக் கூட்டம் நடைபெற்றது. ஒவ்வொரு முறையும் மேகதாது பற்றிப் பேசுவார்கள் நாம் எதிர்ப்போம், எந்தவித வாக்கெடுப்பும் நடைபெற வில்லை.
இந்த நிலையில் ஆணையத் தலைவரே இந்த விவகாரத்தை CWD க்கே திருப்பி அனுப்பி உள்ளார். மேகதாது திட்டத்தைத் தமிழக அரசு அனுமதிக்காது, தமிழக அரசின் இசைவைப் பெறாமல் மேகதாதுவில் ஒரு செங்கல்லைக் கூட எடுத்து வைக்க முடியாது. எதோ கர்நாடக அரசு வசனம் பேசுவதால் மேகதாது அணையைக் கட்ட முடியாது, இந்த விவகாரத்தில் பயப்படத் தேவையில்லை" என பேரவையில் எடப்பாடி பழனிசாமி எழுப்பிய கேள்விக்கு துரைமுருகன் பதிலளித்தார்.
இதையும் படிங்க: விவசாயிகள் போராட்டத்தை யாரோ தூண்டி விடுகிறார்கள்..! ஜி.கே வாசன் கருத்து!