சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று(பிப.12) நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டுத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கி நிறைவடைந்தது. பின்னர், செய்தியாளர்களை சந்தித்த எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசு தயாரித்துள்ள உரை என்பது உப்பு சப்பில்லாத ஊசிப் போன உணவு பொட்டளம் போன்றதாகவும், கடந்தாண்டை போலவே இந்த ஆண்டும் எந்த மக்கள் நலத்திட்டமும் ஆளுநர் உரையில் இல்லை என்று விமர்சனம் செய்துள்ளார்.
சட்டப்பேரவை கூட்டுத்தொடரில் ஆளுநர் உரை குறித்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறுகையில், "எதிர்கட்சி துணைத்தலைவர் இருக்கை தொடர்பாக மீண்டும் சபாநாயகரிடம் கன்டிப்பாக முறையிடுவோம். மரபை கடைபிடிக்க வேண்டும் எனத் தொடர்ந்து பேசி வரும் சபாநாயகர், பிரதான எதிர்கட்சியான அதிமுகவின் சார்பாக தேர்ந்தெடுக்கபட்ட எதிர்கட்சி துணை தலைவருக்கு ஏன் அந்த இருக்கையை கொடுக்க மறுக்கிறார்கள் என தெரியவில்லை. எதிர்கட்சி துணை தலைவர் இருக்கை விவகாரத்தில் சபாநாயகர் நல்ல தீர்வை காண்பார் என எதிர்பார்க்கிறோம்.
இந்த அரசுக்கும் சபாநாயருக்கும் ஆளுநருக்கும் என்ன பிரச்சனை என்பதை அவர்களிடத்தில் கேட்டால் தான் தெரியும். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு பேருந்துக்களை கூட புதிதாக வாங்கி இயக்கவில்லை. தமிழகம் முழுவதும் ஓட்டை உடைசலான பேருந்துகளே இயக்கப்பட்டு வருகிறது. மேலும் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பல பேருந்துகள் நிறுத்தபட்டது. கடந்த அதிமுக-வின் 10 ஆண்டுகால ஆட்சியில் 15ஆயிரம் பேருந்துகள் வாங்கி உள்ளோம்.
சாவார்கர் குறித்து சபாயகர் பேசி இருக்கிறார். சபாநாயகர் அரசியல் சார்பு இல்லாமல் நடுநிலையோடு செயல்பட வேண்டும். அதிமுக கொண்டு வந்த பல மக்கள் நலத்திட்டங்கள் முடக்கப்பட்டுள்ளன. ஏழை எளிய மக்கள் நகரம் மற்றும் கிராமப்புறங்களில் பயன்பெற வேண்டும் என்பதற்காக கொண்டுவந்த அம்மா மினி கிளினிக், மடிக்கணினி வழங்கும் திட்டம், அம்மா இரு சக்கர வாகனம், தாலிக்கு தங்கம் உள்ளிட்ட திட்டங்களை இந்த திமுக அரசு முடக்கி கைவிட்டுள்ளது.
கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் அமைக்க அதிமுக அரசு சரியான திட்டத்தை தான் போட்டது. ஆனால் ஆட்சி மாற்றதுக்கு பிறகு அதிமுக-வின் திட்டத்தை முழுமையாக கொண்டு வந்து இருந்தால் பிரச்சனை ஏற்பட்டு இருக்காது. போக்குவரத்து துறை அமைச்சர் பிரச்சனைகளை மூடி மறைக்கிறார். கருணாநிதி பெயர் வைப்பத்தற்காக அவசர அவசரமாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திறந்து வைத்ததால் தான் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். இதற்கு தீர்வு காண அரசு போக்குவரத்து தொழிற்சங்கங்களை அழைத்து பேசி கிளாம்பாக்கம் விவகாரம் தொடர்பாக ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு மக்களின் சிரமத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு அரசின் உரை நிராகரிப்பு.. 2 நிமிடங்களில் நிறைவு செய்த ஆளுநர்.. சட்டப்பேரவையில் நடந்தது என்ன?