சென்னை: கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி சென்னை புரசைவாக்கத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் 75 சதவீதத்தைப் பயன்படுத்தவில்லை என்று குற்றம்சாட்டிப் பேசியிருந்தார்.
இதனையடுத்து, தன் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி அவதூறு பரப்பியதாக எடப்பாடி பழனிசாமி மீது மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், 13வது நீதித்துறை நடுவர் சக்திவேல் முன்னிலையில் எழும்பூர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி இன்று ஆஜரானார். இந்த அவதூறு வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கு விசாரணையை மீண்டும் ஜூன் 27ஆம் தேதிக்குத் தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
மேலும் எடப்பாடி பழனிசாமி மீது தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. வழக்கு விசாரணைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் இன்பதுரை, "தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கில் இன்று எடப்பாடி பழனிசாமி ஆஜரானார்.
இந்த வழக்கு வரும் ஜூன் 27ஆம் தேதி மறு விசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒருவர் தன்னை தவறாக, அவதூறாகப் பேசிவிட்டார் என்பதற்காகத் தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராவது முறை தான். அந்த வகையில் எடப்பாடி பழனிசாமி இந்த வழக்கில் ஆஜராகியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியைச் செலவிட்ட ஆவணங்களை அவர் சமர்ப்பிக்கும் போது தங்கள் தரப்பு நியாயங்களை எடுத்துரைப்போம்" என்றார்.
இதையும் படிங்க: ரஷ்ய தம்பதியிடம் கட்டு கட்டாக கரன்சி.. விமான நிலையத்தில் பரபரப்பு.. - Money Smuggling Case