தருமபுரி: தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் அசோகனை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வள்ளலார் திடலில் நடந்த இதற்கான பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "சிலர் தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாறிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் யார்? என்று உங்களுக்கே தெரியும்.. என பாமகவை மறைமுகமாக சாடினார். தருமபுரி தொகுதி அவர்களது கோட்டை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அது அதிமுகவின் கோட்டை என்பதை நீங்கள் நிரூபிக்க வேண்டும். அதிமுகவின் வலிமையை நிரூபிக்க வேண்டும்.
சாதி வாரி கணக்கெடுப்பு எடுக்க மாட்டேன் என்கின்ற தேசிய கட்சியோடு கூட்டணி வைத்து போட்டியிடுகிறார்கள். அப்படியென்றால், உங்கள் கொள்கை என்னவாயிற்று? இது சந்தர்ப்பவாத அரசியல் என பாட்டாளி மக்கள் கட்சியின் பெயரையும் பாஜக பெயரையும் குறிப்பிடாமல் பேசினார்.
கரோனா வைரஸை தடுப்பதில் இந்தியாவே பாராட்டும் அளவிற்கு அதிமுக ஆட்சி செயல்பட்டது. கரோனா காலத்தில் ரேஷன் கடைகளில் 11 மாதம் விலையில்லா அரிசி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. பல ஆண்டுகளாக தூர்வரப்படாமல் இருந்த குளம், ஏரி, குட்டைகளைத் தூர்வாருவதற்காக அதிமுக ஆட்சியில் குடிமராமத்து திட்டம் செயல்படுத்தப்பட்டது.
அதிமுக ஆட்சியில் அரசு பள்ளியில் பயிலும் ஏழை எளிய மாணவர்கள், மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்வி பயிலவேண்டும் என்பதற்காக 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. தருமபுரி ஒருங்கிணைந்த நீதிமன்ற புதிய கட்டடம், பாப்பாரப்பட்டியில் சுப்பிரமணிய சிவா மணி மண்டபம் நூலகம் அமைக்கப்பட்டது என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், காரிமங்கலத்தில் பெண்களுக்காக தனி அரசு கலை அறிவியல் கல்லூரி, பாலக்கோட்டில் செயல்பட்டு வந்த சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரி - அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாற்றப்பட்டது. தருமபுரியில் சட்டக் கல்லூரி அமைக்கப்பட்டது என எண்ணற்ற திட்டங்கள் தருமபுரி மாவட்டத்திற்கு அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது.
காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க காரணமாக இருந்தது, அதிமுக அரசு. அவ்வாறு கிடைத்த தீர்ப்பின் அடிப்படையிலான தண்ணீரைக் கூட முறையாக பெற்றுத்தர முடியாத அரசு, திமுக அரசு. கடந்த ஆண்டு முதலமைச்சர் ஸ்டாலின் மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்துவிட்டதை நம்பி 5.5 லட்சம் ஏக்கரில் டெல்டா பகுதி விவசாயிகள் குறுவை சாகுபடி செய்தனர்.
ஆனால், அந்த பயிர் விளைச்சலை எட்ட முடியாத வகையில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது. ஆனால், கர்நாடக அரசு நமக்கு வழங்க வேண்டிய தண்ணீரைக் கூட முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுப் பெற்று தரவில்லை" என்று குற்றம்சாட்டியுள்ளார். இந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் மற்றும் அதன் கூட்டணி கட்சி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் எனப் பலர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: பெண் சித்தாளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து படுகொலை செய்த கொத்தனார் கைது!