ஈரோடு: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக் குமாரை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி பிரச்சாரம் செய்தார். அப்போது பிரச்சார பொதுக்கூட்டம் மேடையில் பேசிய எடப்பாடி பழனிசாமி, "எந்த இடத்தில் மக்களை சந்தித்தாலும், திமுக ஆட்சியை எப்போது வீட்டுக்கு அனுப்பிவிட்டு அதிமுக ஆட்சி மலரும் என்று கேட்கிறார்கள்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குடும்ப கட்சி என்று தொண்டர்கள் மையப்படுத்திச் சொல்கிறார். ஆனால், திமுக தலைவர் ஸ்டாலின் தனக்குப் பின்னால் ஒரு தொண்டர்தான் முதல்வர் என்று சொல்வாரா? ஆகையால், திமுக கார்ப்பரேட் கட்சி; அதனால், திமுக கட்சிக்கு முடிவுகட்டும் தேர்தலாக இது இருக்கும்.
தமிழகம், திமுக குடும்பத்திற்கு மட்டுமே என்று பட்டா போட்டுக் கொடுத்துள்ளதா? அதிமுகவில் சாதாரண தொண்டர் கூட தலைமை பதவிக்கு வரமுடியும். இதுபோன்று இந்தியாவில் அதிமுக கட்சி மட்டுமே உள்ளது. திமுக ஆட்சியில் 3 ஆண்டுகளில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடக்கின்றன.
அதிமுகவில் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு 4 வருடங்கள் ஆட்சி செய்தேன். அப்போது நினைத்து இருந்தால், திமுக மீது ஊழல் வழக்குப் போட்டு இருக்க முடியும். ஆனால், அதை செய்யவில்லை; அதிமுகவை முடக்க திமுக வழக்குப் போடுகிறார்கள். இதற்கெல்லாம், அதிமுக பயப்படாது.
தமிழகத்தைக் காக்க முடியவில்லை. ஆனால், இந்தியாவைக் காக்க ஸ்டாலின் வருகிறார் என்பது 'கூரை ஏறி கோழி பிடிக்கத் தெரியாதவன் வானத்தைக் கிழித்து வைகுண்டம் போன' கதையைப் போல உள்ளது, ஸ்டாலின் கதை. 3 ஆண்டுகளாக ஒன்றும் செய்யாத ஸ்டாலின், இனி எந்த பதவிக்கும் வரமுடியாது.
வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க மக்கள் தயாராகி விட்டார்கள். மக்கள் மத்தியில் இந்த ஆட்சி மீது வெறுப்பு உள்ளது. இதை மறைக்க இந்தியா கூட்டணி (INDIA Alliance) நாடகத்தை அரங்கேற்றி வருகிறார், ஸ்டாலின். இந்தியா கூட்டணியில் ஒருமித்த கருத்து தேர்தலில் போட்டியின் போதே இல்லை. அப்போது எப்படி பிரதமரைத் தேர்ந்தெடுக்கப் போகிறார்கள்.
அதிமுகவினரைப் பார்த்து உங்களுக்கு யார் பிரதமர்? என்று கேட்கின்றனர். ஆந்திர பிரதேசம், ஒடிசா, மேற்கு வங்காளம், கேரளா ஆகிய மாநிலங்களில் பல கட்சிகள் தேசிய அளவில் பிரதமரை முன்னிறுத்தாமல் தேர்தலில் வெற்றி பெற்ற வரலாறு உண்டு" என்று பேசினார்.
இதையும் படிங்க: விக்கிரவாண்டி எம்எல்ஏ புகழேந்தி காலமானார்.. திமுகவில் கடந்து வந்த பாதை!