டெல்லி: கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி டெல்லியில் 2,000 கோடி மதிப்பிலான போதைப் பொருளை மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைப்பற்றினர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேரை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில், இந்த போதைப்பொருள் கடத்தலுக்கு மூளையாகச் செயல்பட்டு வந்த தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் என்பவரை, கடந்த 15 நாட்களாகத் தீவிரமாகத் தேடி வந்தனர்.
மேலும், ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு, அவர் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் இருக்க, அனைத்து விமான நிலையங்கள், துறைமுகங்களில் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் சொகுசு விடுதியில் தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக்கை, மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். இதையடுத்து, ஜாபர் சாதிக்கை டெல்லி அழைத்து வந்த அதிகாரிகள், தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் திமுகவை, பாஜகவினர் மற்றும் அதிமுகவினர் விமர்சித்து வரும் நிலையில், அண்ணா அறிவாலயத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் திமுக மூத்த வழக்கறிஞர் வில்சன் எம்.பி ஆகியோர் கூட்டாக இன்று (மார்ச் 10) செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது, “ஜாபர் சாதிக் கைதும், மத்தியப் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் செய்தியாளர் சந்திப்பும் முழுக்க முழுக்க அரசியல் காரணங்களுக்காகத்தான், ஒரு விசாரணை அமைப்பின் துணை இயக்ககுனர் செய்தியாளர்களைச் சந்திக்கிறார். ஒரு விசாரணை முழுமையாக நடைபெற்ற பிறகு செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும், அதற்கு முன்னதாகவே செய்தியாளர்களைச் சந்திக்கிறார்கள்.
திமுக அரசை கொச்சைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் செய்தியாளர்களைச் சந்தித்தார்கள். தேர்தல் வரும்போது, ஏதாவது ஒரு பொய்யான குற்றச்சாட்டை திமுக மீது பாஜக போடுகிறது. இந்த வழக்கு தொடர்பாக ஆதாரம் இல்லாமல் திமுகவினர் மீது குற்றம்சாட்டுபவர்கள் மீது சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடருவோம். மத்திய அரசு ஜாபர் சாதிக் மீது நடவடிக்கை எடுத்தால், அதை நாங்கள் வரவேற்கிறோம்" என தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில், போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக் மீது அமலாக்கத்துறை பணமோசடி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது. விரைவில் அமலாக்கத் துறையினர் விசாரணையைத் தொடங்க உள்ளனர்.
இதையும் படிங்க: "போதைப்பொருளில் இருந்து இளைஞர்கள் விலகி இருங்கள்" - ஆளுநர் ஆர்.என்.ரவி வேண்டுகோள்!