சென்னை: வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களை இந்தியாவுக்கு கடத்தி வந்ததாக மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த மார்ச் மாதம் திரைப்படத் தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்கை கைது செய்து டெல்லி திகார் சிறையில் அடைத்தனர்.
சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் டெல்லி திகார் சிறையில் இருந்த ஜாபர் சாதிக்கை அமலாக்கத்துறை கடந்த ஜூன் 26ஆம் தேதி கைது செய்தது. இந்த வழக்கில், ஜாபர் சாதிக்கை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிறை மாற்று வாரண்ட் கோரி அமலாக்கத்துறை கடந்த மாதம் மனுத்தாக்கல் செய்தது.
பின்னர், சிறை மாற்று வாரண்ட் வழங்கி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த சிறை மாற்று வாரண்ட் மூலமாக மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு ஜாபர் சாதிக் நேற்று (ஜூலை 15) ஆஜர்படுத்தப்பட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வரும் ஜூலை 29ஆம் தேதி வரை ஜாபர் சாதிக்கை நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இந்நிலையில், அவருடைய பினாமியான ஆவடி காமராஜ் நகரைச் சேர்ந்த ஜோசப் மற்றும் ஆயிஷா என்பவர் வீட்டில் தற்பொழுது அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று ஜாபர் சாதிக்கின் பினாமியான ஜோசப் மற்றும் ஆயிஷா வீட்டில் அமலாக்கத்துறை போலீசார் திடீரென சோதனை மேற்கொண்டனர். மேலும், திருவேற்காட்டில் அவர்கள் தங்கியிருந்த வாடகை வீட்டிலும் ஆயிஷாவை அழைத்து வந்து சோதனை மேற்கொண்டனர்.
இந்த வீட்டிற்கு இவர்கள் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு வாடகைக்கு வந்ததாகவும், ஜாபர் சாதிக்கின் வங்கிக் கணக்கில் இருந்து இவர்களுக்கு அதிக அளவில் பணம் பரிமாற்றம் நடந்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்ததால், இவர்களது வீட்டில் அமலாக்கத்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
காலை 6 மணி முதல் தொடர்ந்து சோதனை நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளதாகவும், இருவரையும் வீட்டிலிருந்து வெளியே செல்ல அனுமதிக்காமல் தொடர்ந்து அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்; நயினார் நாகேந்திரன் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜர்! - Nainar Nagendran CBCID Appearance