சென்னை: மதுரை மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர் சசிகுமார் தாக்கல் செய்த மனுவில், மக்களவைத் தேர்தலின் போது, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரின் முகவர்களும், கூட்டணிக் கட்சியினரும், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
பணப்பட்டுவாடா தொடர்பாக மாணிக்கம் தாகூரின் முகவர்கள் காமராஜ், சீனி, கருப்பையா, பாண்டி ஆகியோருக்கு எதிராக விருதுநகர், மதுரை காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
வழக்குப்பதிவு செய்யப்பட்ட போதும், வேட்பாளர் மாணிக்கம் தாகூர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும், தேர்தல் விதிகளை மீறிய அவரை தகுதி நீக்கம் செய்யக் கோரி தேர்தல் ஆணையத்துக்கு மனு அனுப்பியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிய மனுவின் அடிப்படையில், மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரரின் மனு ஏற்கனவே பரிசீலனைக்கு எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு வாரத்தில் முடிவெடுக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், பாரதிய ஜனதா கட்சி மதுரை மாவட்ட செயலாளரின் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.