சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "எதிர்வரும் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், தங்களது கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கக் கோரி, கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்திருந்தேன்.
அடுத்த நான்கு வாரங்களில் எப்போது வேண்டுமானாலும் தேர்தல் தேதி அறிவிக்கலாம் என்ற நிலையில், தங்களது மனு மீது தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த 2019ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் போன்று, இந்த தேர்தலுக்கும் தங்களது கட்சிக்கு சைக்கிள் சின்னம் வழங்க உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது சபீக் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு தேர்தல் ஆணையம் பதிலளிக்கும்படி உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று (பிப்.23) மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதில் தேர்தல் ஆணையம் சார்பில், நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு முன்னுரிமை தந்து, சைக்கிள் சின்னம் ஒதுக்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.
இதையும் படிங்க: திருப்பூரில் பிரதமர் மோடி பங்கேற்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் - விழா ஏற்பாடுகள் தீவிரம்!