சென்னை: சமீபத்தில், மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்த்ஜலே, “தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் வந்து, எங்கள் கர்நாடகா ஓட்டலில் வெடிகுண்டு வைக்கின்றனர். எங்கள் மாநிலம் மீது தாக்குதல் நடத்துகின்றனர்” என கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசினார்.
இவரது பேச்சுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் தங்களது கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்து, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திமுக சார்பில் இன்று (மார்ச் 20), இந்தியத் தலைமை தேர்தல் ஆணையத்திற்கு, பெங்களூர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தமிழர்களை தொடர்புபடுத்திய பேசிய பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்ஜலே மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மின்னஞ்சல் மூலம் புகார் கடிதம் அனுப்பி இருந்தார். இந்த நிலையில், இந்தப் புகார் மீது, தலைமைத் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
அதன் அடிப்படையில், மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்த்ஜலே மீது தேர்தல் நடத்தை விதிகளை மீறியுள்ளதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுத்து, அதன் விவரத்தை 48 மணி நேரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என கர்நாடக மாநில தேர்தல் அதிகாரிக்கு அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தமிழர்களை தொடர்புபடுத்தி பேசிய விவகாரம்; மத்திய இணையமைச்சர் மீது மதுரை போலீசார் வழக்குப்பதிவு!