கடலூர்: கடலூர் மாவட்டம் பண்ருட்டி காமராஜர் நகரில் வசித்து வரும் சத்யா பன்னீர்செல்வம், கடந்த 2016ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை அதிமுக எம்.எல்.ஏவாக இருந்து வந்துள்ளார். இவரது கணவர் பன்னீர்செல்வம், கடந்த 2011-2016 காலக்கட்டத்தில் நகராட்சித் தலைவராக பதவி வகித்திருந்தார். அப்போது, பண்ருட்டி பேருந்து நிலையத்தில் உள்ள இரண்டு சக்கர வாகனம் நிறுத்துமிடத்தை குத்தகைக்கு விடுவது தொடர்பாக டெண்டர் விட்டதில், 20 லட்சம் ரூபாய் வரை முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது.
இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, இந்த மோசடி தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று (பிப்.27) வழக்குப் பதிவு செய்தனர். இதில் பன்னீர்செல்வம் மற்றும் அப்போதைய பண்ருட்டி நகராட்சி கமிஷனர் பெருமாள் உள்ளிட்ட ஆறு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், கடலூர் லஞ்ச ஒழிப்பு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தேவநாதன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், இன்று (பிப்.28) பண்ருட்டியில் உள்ள முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சத்யா பன்னீர்செல்வத்தின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட நான்கு இடங்களிலும், சென்னையில் உள்ள முன்னாள் பண்ருட்டி நகராட்சி கமிஷனர் பெருமாள் வீட்டிலும் சோதனை நடத்தி வருகின்றனர்.
மேலும், சத்யா பன்னீர்செல்வத்துக்கு நெருங்கிய நண்பர்கள் வீடுகள் உள்ளிட்ட நான்கு இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சோதனை முடிந்த பின்னரே, இந்த புகார் தொடர்பான முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதா என்பது உள்ளிட்ட தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வரும் சம்பவம் அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: கொலைவெறி தாக்குதல்: 3 பேருக்கு கடுங்காவல் தண்டனை விதித்த சென்னை அமர்வு நீதிமன்றம்