சென்னை: கடந்த 2016 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் சென்னை தியாகராய நகர் தொகுதி அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் சத்யா. தொகுதி மேம்பாட்டு நிதியை மோசடி செய்ததாக இவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் ஒன்று அளிக்கப்பட்டது.
அப்புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சத்யா தனது பதவியை துஷ்பிரயோகம் செய்து, தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சுமார் ரூ.35 லட்சம் வரை மோசடி செய்திருப்பது தெரிய வந்துள்ளது.
குறிப்பாக, கடந்த 2018-2019 ஆண்டில் தொகுதியில் கட்டிடம் கட்டப் போவதாகக் கூறி, தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மோசடி செய்திருந்தது, முதல் தகவல் அறிக்கையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் குறிப்பிட்டுள்ளனர். மேலும், மேற்கு மாம்பலம் காசிகுளம் பகுதியில் ரூ.17 லட்சம் மதிப்பில் பன்னோக்கு கட்டிடங்கள் கட்டப் போவதாகக் கூறி, மாநகராட்சி செயற்பொறியாளர்கள் பொய்யான ஆவணத்தை தயார் செய்து, ரூ.14 லட்சம் வரை மேம்பாட்டு நிதியிலிருந்து எடுத்து மோசடி செய்துள்ளார்.
அதேபோல், கோடம்பாக்கம் பிருந்தாவன் தெரு பகுதியில் கட்டிடம் கட்டப் போவதாக ரூ.8 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் நிதியைப் பெற்று மோசடி செய்ததும் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து, பிருந்தாவன் தெரு பகுதியிலேயே ரூ.10 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் கட்டிடம் கட்டுவதாகக் கூறி ரூ.8 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய் ஏமாற்றியதும், ஈஸ்வரன் கோயில் தெருவில் ரூ.7 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டிடம் கட்டுவதாகக் கூறி ரூ.6 லட்சm ரூபாய் நிதியைப் பெற்று மோசடி செய்துள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இவ்வாறு 4 இடங்களில் கட்டிடம் கட்டுவதாகக் கூறி, தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மொத்தம் ரூ.35 லட்சம் வரை முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சத்யா மோசடி செய்துள்ளது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மேற்கொண்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், அவரின் மோசடிக்கு உடந்தையாக இருந்த சிவிடி எண்டர்பிரைஸ் என்ற நிறுவனத்தைs சேர்ந்த சிலர் இருப்பதாகவும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் முதல் தகவல் அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளனர்.
குறிப்பாக, இவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளான 120 (பி) - கூட்டு சதி, 167 - அரசு ஊழியரைக் காயப்படுத்தும் நோக்கத்தோடு போலி ஆவணத்தை தயாரித்தல், 406 - நம்பிக்கை மோசடி, 409- அரசு ஊழியர் நம்பிக்கை மோசடியில் ஈடுபடுதல், 420 - மோசடி மற்றும் ஊழல் தடுப்பு சட்டப்பிரிவுகள் என மொத்தம் 11 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது.
மோசடியில் ஈடுபட்ட முன்னாள் அதிமுக எம்எல்ஏ சத்யநாராயணன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த கோடம்பாக்கம் சென்னை மாநகராட்சி உதவி பொறியாளர்கள் இளங்கோவன், மணி ராஜா, ராதாகிருஷ்ணன், பெரியசாமி, நடராஜன் மற்றும் சிவிடி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தைச் சேர்ந்த பாஸ்கரன் ஆகிய 7 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் கொளத்தூர் மணி பரபரப்பு புகார்!