தமிழ்நாடு: தீபாவளியை முன்னிட்டு லஞ்சம் பெறப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் தமிழகம் முழுவதும் பல்வேறு அரசுத்துறை அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அரக்கோணம் சார்பதிவாளர் அலுவலகம்: நேற்று ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் சார்பதிவாளர் அலுவலகத்தில் ராணிப்பேட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி கணேசன் தலைமையிலான போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மின்அலுவலக அறை, ரெக்கார்ட் ரூம் மற்றும் கழிவறையில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 53 ஆயிரத்து 510 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிகிறது.
அதுமட்டுமன்றி பத்திரப்பதிவு செய்ய வந்தவர்களிடம் லஞ்சமாக புரோக்கர்களிடம் கொடுத்து வைத்திருந்த பணம் என மொத்தம் 1 லட்சத்து 5 ஆயிரத்து 210 ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ராணிப்பேட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிறிஸ்டியன் பேட்டை மோட்டார் வாகன ஆய்வாளரிடம் சோதனை: ராணிப்பேட்டை நவல்பூர் மணியக்கார தெருவில் வசித்து வருபவர் ஸ்ரீதேவி ஜெயந்தி (வயது 35). தமிழக -ஆந்திர எல்லையான வேலூர் மாவட்டம் கிறிஸ்டியன் பேட்டையில் உள்ள சோதனை சாவடியில் மோட்டார் வாகன ஆய்வாளராக வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று காலை இந்த சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்டதில் கணக்கில் வராத 1.38 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து நவல்பூர் பகுதியில் உள்ள மோட்டார் வாகன ஆய்வாளர் ஸ்ரீதேவி ஜெயந்தி வீட்டிற்கு விரைந்த லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் மைதிலி தலைமையிலான ஐந்து பேர் அடங்கிய குழுவினர் தீவிர சோதனை நடத்தினர்.
சுமார் 4 மணியளவில் தொடங்கிய சோதனையானது இரவு 8 மணிவரையில் நடைபெற்றது. இந்த சோதனையில் மோட்டார் வாகன ஆய்வாளர் வீட்டிலிருந்து கணக்கில் வராத 4 லட்சத்து 45 ஆயிரத்து 900 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் வீடு மற்றும் நிலம் சார்ந்த 6 ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: தேனி பத்திரப்பதிவு துறை அலுவலகத்தில் அதிரடி ரெய்டு! சிக்கிய ரொக்கப் பணம் எவ்வளவு?
எலவம்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகம்: திருப்பத்தூர் மாவட்டம் எலவம்பட்டியில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் திருப்பத்தூர் லஞ்ச ஒழிப்புத்துறை காவல் ஆய்வாளர் கௌரி தலைமையிலான அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுப்பட்டனர். அப்பொழுது லஞ்ச ஒழிப்புதுறையினரை கண்டதும் அலுவலகத்தில் இருந்த நபர்கள் தப்பியோடிய நிலையில், அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளிடம் லஞ்ச ஒழிப்புதுறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு, அலுவலங்களில் உள்ள ஆவணங்களை சோதனை செய்ததில் கணக்கில் வராத 72 ஆயிரத்து 500 ரூபாயை லஞ்ச ஒழிப்புத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
மயிலாடுதுறை ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலகம்: மயிலாடுதுறை மாவட்டம் கச்சேரி சாலையில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர். டிஎஸ்பி மனோகரன் தலைமையில் லஞ்ச ஒழிப்பு காவல் ஆய்வாளர் அருள் பிரியா மற்றும் போலீசார் மாலை 5 மணிக்கு பதிவுத்துறை அலுவலகத்தில் நுழைந்தனர்.
அங்கு கதவுகளை மூடிவிட்டு, பல்வேறு பணிகளுக்காக அலுவலகத்துக்கு வந்திருந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்களில், ரூபாய் ஆயிரத்துக்கும் குறைவான வகையில் தொகை வைத்திருந்திரை வெளியில் அனுப்பிவிட்டு கூடுதல் தொகை வைத்திருந்தோரிடம் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து சார் பதிவாளர் உள்ளிட்ட அலுவலர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
நள்ளிரவு 12 மணியை கடந்தும் விசாரணை நீடித்த நிலையில், சார் பதிவாளர் நிலை -2 அலுவலகத்தில், அலுவலக உதவியாளர் சரண்யாவிடம் இருந்து 5ஆயிரத்து 400 ரூபாயும், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் ஜி.அபிராமியிடமிருந்து 2 ஆயிரத்து 500 ரூபாயும், நில புரோக்கர் செந்தில்குமார் என்பவரிடம் இருந்து 2 ஆயிரத்து 800 ரூபாயும், அலுவலக பதிவு அறையிலிருந்து கணக்கில் வராத 12 ஆயிரம் என மொத்தம் 22 ஆயிரத்து 700 ரூபாயை பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. 5 மணியிலிருந்து பதிவுத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விடிய விடிய சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரூர் சார்பதிவாளர் அலுவலகம்: தருமபுரி மாவட்டம் அரூர் சார் பதிவாளர் அலுவலகத்தில், அதிக அளவில் பணம் பெறுவதாக தருமபுரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து நேற்று மாலை தருமபுரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை காவல் ஆய்வாளர் பெருமாள் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு துறையினர், அரூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்பொழுது சார் பதிவாளர் அலுவலகத்தை மூடி, ஊழியர்கள், ஆவண எழுத்தர்கள், பத்திர பதிவுக்கு வந்த பொதுமக்கள் உள்ளிட்டோரை வெளியில் விடாமல் விசாரணை நடத்தினர். அப்போது சார் பதிவாளர் ரவிச்சந்திரனிடம் கணக்கில் வராத 3.57 லட்சம் ரூபாய் இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து பணத்தை பறிமுதல் செய்து, சார் பதிவாளர் ரவிச்சந்திரன் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினா்.
கோத்தகிரி வட்டாட்சியர் அலுவலகம்: நீலகிரி மாவட்ட கோத்தகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் பல்வேறு முறைகேடு நடப்பதாக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தகவல் வந்ததைத் தொடர்ந்து வட்டாட்சியர் அலுவலகத்தில் உதகை லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் பரிமளா தேவி தலைமையில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
இதில் வட்டாட்சியர் கோமதியின் கூகுள் பே மூலமாக சுமார் 6 லட்சத்திற்கு மேல் பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இது பட்டா சிட்டா பெயர் சேர்த்தல், சால்வன்ஸ் சான்றிதழ் என பல்வேறு சான்றிதழ்களுக்காக லஞ்சமாக பெறப்பட்ட தொகை என்றும் கூறப்படுகிறது.
நேற்று விடிய, விடிய விசாரணை நடத்தி இன்று காலை 6 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். தொடர்ந்து அனைத்து ஊழியர்களிடமும் விசாரணை நடைபெற்றது. இதில் துணை வட்டாட்சியர், கிராம அலுவலர்கள் அனைவரது வங்கி கணக்கும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் விரைவில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த உள்ளனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்