கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் ஊத்துக்குளி பகுதியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் நசீமா. இவர் கடந்த 2023ஆம் ஆண்டு ஜோதி நகர் பகுதியில் நாகராஜ் என்பவரிடம் இருந்து சுமார் 771 சதுர அடியுள்ள வீட்டினை வாங்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து, அந்த வீட்டை பத்திரப்பதிவு செய்த நசீமா, சொத்து வரியை தனது பெயருக்கு மாற்ற பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் அமைந்துள்ள தகவல் மையத்திற்குச் சென்று விண்ணப்பித்துள்ளார்.
அப்போது, அந்த விண்ணப்பத்தை பரிசீலனை செய்த பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் வரி வசூல் பிரிவில் பணியாற்றும் யோகேந்திரன்(38), வழக்கறிஞர் நசீமாவைத் தொடர்பு கொண்டு பத்திரத்தில் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்றால், தனக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று கேட்டதாகக் கூறப்படுகிறது.
அதற்கு நசீமாவோ, அனைத்து விண்ணப்பங்களும் சரியாக உள்ள நிலையில் எதற்காக பணம் கேட்கிறீர்கள் எனக் கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது, பணம் கொடுத்தால் மட்டுமே உங்களது பணி நடைபெறும் எனவும், இல்லையென்றால் கிடப்பில் போடப்படும் எனவும் யோகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் லஞ்சம் கொடுக்க மனமில்லாத நசீமா, பல நாட்களாக நகராட்சி அலுவலகம் சென்று அலைந்துள்ளார். ஆனால், பணி நிறைவேறாத பட்சத்தில், நசீமா கோவையில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில், நசீமாவிடம் பணத்தை கொடுத்து யோகேந்திரனிடம் வழங்குமாறு லஞ்ச ஒழிப்புத்துறையினர் அனுப்பி வைத்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, லஞ்சம் கேட்ட யோகேந்திரனை பொறிவைத்து பிடிக்க லஞ்ச ஒழிப்புத்துறையினர் நகராட்சி அலுவலகத்தில் காத்திருந்த போது, அங்கு வந்த வழக்கறிஞர் நசீமாவிடம் யோகேந்திரன் ரூ.6 ஆயிரம் பெற்றுள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் அவரை கையும் களவுமாகப் பிடித்துள்ளனர். அதையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில், லஞ்சம் கேட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட அதிகாரியே ஒப்புக்கொண்ட காரணத்தால் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அவரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.