வேலூர்: வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் அறிமுக கூட்டம், கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்றது. இதில் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், மற்றும் நீர்வளத்துறை அமைச்சரும், திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், “அதிமுகவின் தேர்தல் அறிக்கை எங்களைப் பின்பற்றி கொடுக்கப்பட்டுள்ளது. "நாங்கள் ACTIVE VOICE என்றால் அவர்கள் PASSIVE VOICE". டெல்லி முதல்வர், ஜார்க்கண்ட் முதல்வர் போன்றோரின் கைது எதிர்கட்சிகளுக்கு பாதிப்பு என்பதை விட நாட்டிற்கும், ஜனநாயகத்திற்கும் மிகப்பெரிய பாதிப்பு.
தேர்தல் நேரத்தில் நடுவில் இறங்கி தன்னிடம் அதிகாரம் இருக்கிறது என்பதற்காக இத்தகைய செயலை செய்வது ஜனநாயகத்திற்கு அழகல்ல, மோடி போன்றவர்களுக்கும் அழகல்ல என்பதுதான் எனது கருத்து. ஆளுநரை நாங்கள் எதுவும் திட்டவில்லை, ஆனால் உச்ச நீதிமன்றம் திட்டி இருக்கிறது, இதற்குப் பிறகும் அவர் அந்த பதவியில் தொடர்வது அவருக்கு அழகல்ல. காரணம், உச்ச நீதிமன்றம் இதுவரையில் எந்த ஒரு அரசு அதிகாரியைப் பற்றியும் இவ்வளவு கேவலமாக சாட்டையில் அடிப்பது போல் பேசியது இல்லை. இவ்வளவும் வாங்கிக் கொண்டு இருக்கிறார் என்றால், இவருக்கு சூடும் இல்லை, சொரணையும் இல்லை என்றுதான் அர்த்தம்” என்றார்.
அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் மாநில ஆளுநரின் ஒப்புதலோடு ஆளுநரை நியமிக்க வேண்டுமென மத்திய அரசிடம் வலியுறுத்துவோம் எனக் குறிப்பிட்டுள்ளது குறித்து கேட்டதற்கு, “நாங்கள் ஆளுநரே வேண்டாம் என்கிறோம், அவர்கள் அப்படிச் சொல்கிறார்கள். அதேபோல அதிமுக தேர்தல் அறிக்கையைப் பொறுத்தவரை, அவர்கள் தான் எங்களைப் பின்பற்றுகிறார்கள்” என்றும் கூறினார்.
மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என கர்நாடக அமைச்சர் சிவக்குமார் கூறியது குறித்து கேட்டதற்கு, “அந்த துறைக்கு அவர் தான் அமைச்சர், அப்படித்தான் சொல்லுவார். நான் ஏற்கனவே தெளிவாக சொல்லிவிட்டேன். எந்த அணையை கட்டுவதாக இருந்தாலும், மத்திய நீர்வளத்துறைக்கு அவர்கள் கடிதம் அனுப்ப வேண்டும், அதற்குப் பிறகு சுற்றுச்சூழல் துறை, வனத்துறைக்கும் அனுப்ப வேண்டும்.
இத்துறைகள் அனுமதி அளித்தால் மட்டுமே தமிழ்நாட்டின் ஒப்புதலோடுதான் மத்திய அரசு அனுமதி கொடுக்க முடியும். இதுதான் சட்டம். ஆனால், கர்நாடக மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக செங்கலை கொண்டு வந்தோம், சிமெண்டை கொண்டு வந்தோம், கட்டியே தீருவோம் என பேசிக் கொண்டிருக்கிறார்கள். சிவக்குமார் கொஞ்சம் வேகமாக இருக்கிறார் அவ்வளவுதான்” என்றார்.
இதையும் படிங்க: ஏப்ரல் மாதத்தில் பிரதமர் மோடி வேலூர் வருகை.. ஏ.சி சண்முகம் தகவல்! - AC Shanmugam