சென்னை: தமிழக சட்டசபை கூட்டம் நேற்று காலை தொடங்கியது. கேள்வி நேரம் முடிந்ததும் 2024-25-ம் நிதி ஆண்டில் ஏற்பட்ட கூடுதல் செலவுக்காக சட்டசபையில் ரூ.3 ஆயிரத்து 53 கோடிக்கு துணை பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து மதுரை 'டங்ஸ்டன்' சுரங்க அனுமதியை ரத்து செய்யக்கோரும் தீர்மானம் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், தமிழக சட்டசபையின் 2-ம் நாள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இரா.மோகன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்தனர்.
இபிஎஸ் கவன ஈர்ப்பு: அந்த வகையில் முல்லைப் பெரியாறு அணை பராமரிப்புப் பணி செய்ய இரண்டு வாகனங்கள் சென்றன. அவற்றை தடுத்து நிறுத்தி பணியை மேற்கொள்ளவிடாமல் இடையூறு செய்யப்படுகிறது. எனவே வைக்கம் நிகழ்வுக்காக கேரளா செல்லும் தமிழ்நாடு முதலமைச்சர், முல்லை பெரியாறு அணையின் ஆண்டு பராமரிப்பு தொடர அனுமதி பெற வேண்டும் என கவன ஈர்ப்பு கொண்டு வந்து எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
துரைமுருகன் பதில்: இதற்கு பதில் அளித்த அமைச்சர் துரைமுருகன், முல்லைப் பெரியாறு அணையில் பழுது பார்ப்பதற்கு செல்லும் தமிழக அதிகாரிகளை கேரள அரசு தடுக்கக்கூடாது என்று திட்டவட்டமாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கேரள மாநில அரசு அதிகாரிகளிடம் பேசியுள்ளேன். முதலமைச்சருடன் நானும் விரைவில் கேரளா செல்கிறேன். இதுகுறித்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று துரைமுருகன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "அதானி என்னை சந்திக்கவும் இல்லை; நான் அவரை பார்க்கவும் இல்லை" - முதலமைச்சர் விளக்கம்!
இதற்கிடையே குறுக்கிட்டு பேசிய சிபிஎம் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி, "கேரள அரசு இடையூறு செய்கிறது என எதிர்கட்சித் தலைவர் பேசியது தவறு" என்றார்.
இதையடுத்து பேசிய துரைமுருகன், "வாகனங்களை மறித்தல் என்பதற்கு எதிர்க்கட்சி தலைவர் கூறியதுதான் பொருள்" என்று தெரிவித்தார்.