சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று (பிப்.13) ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெறுகிறது. அதற்கு முன்பாக, சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்கள் ஆர்.வடிவேல், தெய்வநாயகம், தங்கவேல், துரை ராமசாமி, கு.க.செல்வம் மற்றும் எஸ்.ராஜசேகரன்இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டன.
இதனையடுத்து, இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் எஸ்.வெங்கிடரமணன், கண் மருத்துவர் எஸ்.பத்ரிநாத் மற்றும் தமிழ்நாடு முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி, தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த், ஒடிசாவின் முன்னாள் ஆளுநர் எம்.எம்.ராஜேந்திரன் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனையடுத்து, சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு உரிய துறை அமைச்சர்கள் தற்போது பதிலளித்து வருகின்றனர்.
அந்த வகையில், சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “சேலம் மாவட்டத்திலுள்ள ஓமலூர், எடப்பாடி உள்ளிட்ட 4 தொகுதிகளில் இருக்கும் சுமார் 100 ஏரிகள் தண்ணீர் இல்லாமல் வறண்ட நிலையில் காணப்படுகிறது.
மேலும், நீர் ஏற்ற திட்டப் பணிகள் சுணக்கமாக நடைபெறுவதாகத் தெரிவித்தார். அப்பணிகளை வேகமாகவும், துரிதப்படுத்தவும் அரசு ஆவணம் செய்ய வேண்டும்” என வலியுறுத்தினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன் நீர் ஏற்ற திட்டப் பணிகளை விரைந்தும், துரிதமாகவும் நடக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
முன்னதாக, தமிழ்நாடு முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் நேற்று (பிப்.12) காலை 10 மணிக்கு தொடங்கியது. தமிழில் தனது உரையை வாசிக்கத் தொடங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி, தேசிய கீதத்தைத் தொடக்கத்திலும் இறுதியிலும் வாசிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்து, தனது உரையை முடித்துக் கொண்டார். தமிழ்நாடு அரசின் உரையை முற்றிலும் புறக்கணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: திருடிய பதக்கத்தை திருப்பிக் கொடுத்த திருடன்.. இயக்குநர் மணிகண்டன் வீட்டு கொள்ளைச் சம்பவத்தில் திருப்பம்!