தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே திருவிடைமருதூரில் தனியார் திருமண மண்டபத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தஞ்சை மண்டலத்திற்குட்பட்ட தஞ்சை வடக்கு, தஞ்சை தெற்கு, மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் ஆகிய ஆறு மாவட்டங்கள் சார்பில் தேர்தல் நிதி வழங்கும் விழா அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆடுதுறை ரா.முருகன் தலைமையில் நேற்று (பிப்.12) நடைபெற்றது.
அதிமுக-பாஜகவின் பிரிவு மகிழ்ச்சி: இதில், மதிமுகவின் முதன்மை செயலாளர் துரை வைகோவிடம் அக்கட்சியின் தொண்டர்கள் பலரும் ஒரு லட்சத்துக்கும் அதிமான பணத்தை நிதியாக வழங்கினர். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ, "அதிமுகவுடன் எந்தெந்த கட்சிகள் கூட்டணி அமைக்கும் என்பதற்கு நான் பதிலளிக்க முடியாது. அதனை நீங்கள் அண்ணன் எடப்பாடி கே.பழனிசாமியிடம் தான் கேட்க வேண்டும். ஆனால், மதவாத பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக விலகி இருப்பதை திராவிட இயக்கம் என்ற முறையில் எனக்கு சந்தோஷம்தான்.
மதிமுகவிற்கு 2 லோக்சபா, 1 ராஜ்ய சபா தொகுதிகள் கேட்டுள்ளோம்: மயிலாடுதுறை நாடாளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிடும் எண்ணம் எதுவும் இல்லை. மதிமுக சார்பில் இந்த முறை 2 லோக்சபா, 1 ராஜ்ய சபா கேட்டிருக்கிறோம். எத்தனை தொகுதியில் போட்டியிடுவது, எந்தெந்த தொகுதியில் போட்டியிடுவது என்பதனை கூட்டணி தலைமையும், இயக்க தலைமையும் தான் முடிவு செய்யும். திமுகவில் நாடாளுமன்றத் தேர்தல் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் 10 தினங்களில் நிறைவு பெற்றுவிடும்.
இது பாஜகவை வீழ்த்துவோம்: 2024 நாடாளுமன்றத் தேர்தல் மதவாத பாஜகவை வீழ்த்தும் தேர்தலாக அமையும். திமுக கூட்டணி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 இடங்களில் 100-க்கு 100 விழுக்காடு என 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். இந்திய அளவில் இந்தியா கூட்டணியும் மாபெரும் வெற்றி பெறும். தமிழ்நாடு உள்ளிட்ட பாஜகவை எதிர்க்கும் கட்சிகள், ஆளும் மாநிலங்களைத் தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு வஞ்சித்தே வருகிறது. குறிப்பாக, இந்த அரசுகளுக்கு எதிராக அந்த அந்த மாநில ஆளுநர்கள் வாயிலாக பேரலல் கவர்மண்ட் நடத்தி தொல்லைகள் தரப்படுகிறது' என்று குற்றம்சாட்டினார்.
மேலும் பேசிய அவர், 'சென்னை புயல், தூத்துக்குடி வெள்ளம் பாதிக்கப்பட்ட நிலையில், மத்தியக் குழு வந்து பார்வையிட்டது. உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரடியாக வந்து பார்வையிட்டார். ஆனால், தமிழ்நாடு அரசு கோரிய ரூ.37 ஆயிரம் கோடியில் இதுவரை 1 ரூபாயைக் கூட மத்திய அரசு வழங்கவில்லை. மத்திய அரசு வழங்கிய ரூ.450 கோடி கூட பேரிடர் நிவாரண நிதி மட்டுமே. இதற்கு மற்றொரு உதாரணம் சென்னை மெட்ரோ ரயில் 2ஆம் கட்ட திட்டம் ரூ.63 ஆயிரம் கோடியில் மதிப்பிடப்பட்டு இதற்காக மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு 2019ஆம் ஆண்டு விண்ணப்பித்திருந்தது. 2020ஆம் ஆண்டு அமித்ஷா இதற்கு அடிக்கல் நாட்டினார்.
மத்திய அரசிற்குப் பாடம் புகட்டுவோம்: கடந்த 2021-2022 ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் இத்திட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால் கேபினட் கமிட்டி ஆப் எக்னாமிக் அபேர்ஸ் இதற்கு இதுவரை ஒப்புதல் வழங்காததால் இதற்கான நிதியை மத்திய அரசு வழங்காத நிலையில், திட்டம் மேலும் தாமதமாகக் கூடாது என்ற நோக்கில், இந்த தொகையையும் தற்போது தமிழ்நாடு அரசு செலவிட்டு மேற்கொண்டு வருகிறது. எனவே இத்தகைய போக்கைக் கண்டிக்கும் வகையில் வருகிற நாடாளுமன்றத் தேர்தல் மத்திய அரசிற்குப் பாடம் புகட்டுகின்ற தேர்தலாக நூறு விழுக்காடு அமையும்.
பூரண மதுவிலக்கு: இந்தியா கூட்டணியிலிருந்து நிதிஷ்குமார் விலகியுள்ளார். தேர்தல் நெருக்கத்தில், பாஜகவை வீழ்த்தும் வகையில் கூட்டணி அமையும். அதில் நல்ல முடிவு வரும். மதிமுகவின் கொள்கை பூரண மதுவிலக்கு தான். திமுக அரசு மதுக்கடைகளின் எண்ணிக்கையினை குறைத்த போது வரவேற்ற நாங்கள், பூரண மதுவிலக்கு தான் தமிழ்நாட்டிற்கு விமோசனம் தரும் என்று ஏற்கனவே கூறியுள்ளோம்.
விஜய்யின் அரசியலில் நம்பிக்கை: நடிகர் விஜய் உழைப்பால் உயர்ந்தவர், அரசியல் இயக்கம் தொடங்கி நேரடி அரசியலுக்கு வருகிறார். அடுத்து அவரது கட்சிக் கொள்கை, திட்டங்கள் வெளியிடட்டும், தமிழ்நாடு அரசியலில் அவர் நல்ல விதமாக செயல்படுவார் என்ற நம்பிக்கை எனக்குள்ளது அவருக்கு எங்களது வாழ்த்துக்கள்.
தமிழ்நாடு மீனவர்கள் தாக்குதலுக்குள்ளாவது தொடர் கதையாகி வருகிறது. கடந்த 4 ஆண்டுகளில் தாக்குதல்கள் அதிகரித்துள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு மட்டும் 200 மீனவர்கள் தாக்குதலுக்குள்ளாகி கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், தற்போது வரை 151 படகுகள் இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்டு நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளது. இதில், தமிழ்நாடு அரசு வலியுறுத்த மட்டுமே முடியும். இந்தியா வல்லரசு எனக் கூறிக் கொண்டிருக்கும் நாம், நம் அருகில் உள்ள நாடான இலங்கை அரசால் தமிழ்நாடு மீனவர்கள் தாக்கப்படுவதையும், படகுகள் சேதப்படுவதையும், பறிமுதல் செய்வதையும் தடுக்க முடியவில்லை' என்று கூறினார்.
இதையும் படிங்க: கூட்டுறவு நிறுவனங்களில் ரூ.5 லட்சம் வரை கல்விக்கடன்: தமிழக அரசு அறிவிப்பு!