சென்னை: தாம்பரம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் கடந்த இரண்டு வாரங்களாகச் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுச் சிறப்பு ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தன. தாம்பரம் ரயில் நிலையத்தில் உள்ள தண்டவாளங்கள் 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் அளவில் அமைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அதனை அகற்றிவிட்டு 120 முதல் 130 கிலோமீட்டர் வேகத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் செல்லும் வகையில் தண்டவாளங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் ஏற்கனவே ஒன்பது நடைமேடைகள் உள்ள நிலையில் கூடுதலாக இரண்டு நடைமேடைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டு மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை கடற்கரை இடையே காலை 9.30 மணி முதல் மதியம் 1:30 மணி வரை சுமார் 63 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டு தாம்பரம் ரயில் நிலையத்தை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதேபோல் எக்ஸ்பிரஸ் ரயில்கள் அனைத்தும் செங்கல்பட்டு ரயில் நிலையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் புறநகர் மின்சார ரயில்கள் ரத்தால் பயணிகள் வசதிக்காக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பாக 70 சிறப்புப் பேருந்துகள் இன்று முதல் இயக்கப்பட்டுள்ளன. இப்பேருந்துகள் பல்லாவரம் முதல் செங்கல்பட்டு வரையும், தாம்பரம் முதல் தியாகராய நகர் மற்றும் பிராட்வே வரையும் இயக்கப்படுகிறது.
வழக்கமாக இயங்கும் பேருந்துகளுடன் இந்த 70 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படுவதால் தாம்பரம், பல்லாவரம் கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் ஜிஎஸ்டி சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அதேபோல் தாம்பரம், பல்லாவரம் மற்றும் கூடுவாஞ்சேரி பேருந்து நிலையங்களில் அதிகப்படியான பயணிகள் பேருந்துகளில் பயணம் செய்ய வந்திருப்பதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு உள்ளது.
இதனால் பல்லாவரம்,தாம்பரம், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட ஜிஎஸ்டி சாலைகளில் சுமார் 175 காவலர்கள் போக்குவரத்து சரி செய்யும் பாதுகாப்புப் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மதியம் 1:30 மணிக்கு மேல் சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரையும், தாம்பரத்திலிருந்து செங்கல்பட்டு வரையும் சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படும் எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: கடலில் மூழ்கப்போகும் சென்னையின் எரியாக்கள்.. அதிர்ச்சி ரிப்போர்ட்!