தேனி: மாவட்டம், பெரியகுளம் பகுதியில் குடிநீர் ஆதாரமாகவும், பாசனத்திற்கும் உள்ள சோத்துப்பாறை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைவால் அணைக்கு நீர்வரத்து முற்றிலும் இல்லாமல் அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வந்தது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக சோத்துப்பாறை அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் அணைக்கு நீர் வரத்து துவங்கி அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. நேற்று (அக்.11) மாலை மற்றும் இரவு நேரத்தில் அணையில் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழையால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்து உள்ளது.
இதையும் படிங்க: பார்த்து பார்த்து வரைந்த தவெக மாநாட்டின் விளம்பரங்கள் அழிப்பு! ஈரோடு நிர்வாகிகள் ஷாக்..!
இதனால், சோத்துப்பாறை அணையின் முழு கொள்ளளவான 126.28 அடியில் ஒரே நாளில் 113.12 அடியில் இருந்த நீர்மட்டம் 4 அடி உயர்ந்து 117.42 அடியாக உயர்ந்துள்ளது. மேலும், ஏற்கனவே மஞ்சளாறு அணை அதன் முழு கொள்ளளவை எட்டி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், சோத்துப்பாறை அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.
இதுமட்டும் அல்லாது, சோத்துப்பாறை அணையில் இருந்து முதல் போக பாசனத்திற்காக வரும் 16ஆம் தேதி நீர் திறக்கப்பட உள்ள நிலையில் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்