திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி 42வது வார்டில் இருக்கும் கே.வி.ஆர் நகர் மற்றும் தந்தை பெரியார் நகரில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று நள்ளிரவு 2 மணி போல் பெய்ய தொடங்கிய கனமழை சுமார் 2 மணி நேரமாக நிக்காமல் பெய்துள்ளது.
தீடீரென வீட்டுக்குள் புகுந்த வெள்ளநீர்: இதனால் அங்குள்ள ஜம்மனை ஓடையில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அங்குள்ள 80க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. வீடுகளுக்குள் இடுப்பு அளவு வரை தண்ணீர் சென்றபோதும் பொதுமக்கள் உடனடியாக விழித்துக் கொண்டதால் உயிர்சேதம் ஏதும் இல்லை. அந்த வெள்ளநீரோடு சாக்கடை நீரும் புகுந்து உள்ளதால் அங்குள்ள வீடுகளில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பொதுமக்கள் குழந்தைகளை வைத்துக்கொண்டு கடுமையான சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.
நாசமான வீட்டுப் பொருட்கள்: இதில் வீடுகளுக்குள் இருந்த எலக்ட்ரிக் பொருட்கள், பள்ளி குழந்தைகளின் புத்தகங்கள், தீபாவளி பட்டாசுகள், புத்தாடைகள் என அனைத்தும் வெள்ளநீரில் நனைந்து வீணானது. மேலும் அதே ஓடையில் இருக்கக்கூடிய பொன் நகர், அம்பேத்கர் நகர் பகுதிகளை இணைக்க கூடிய தரைப்பாலம் மழை வெள்ளத்தால் பெரிதும் சேதம் அடைந்தது. அதிகாலையில் மூன்றடி உயரம் வந்த வெள்ளமானது காலை 10 மணியளவில் குறைய தொடங்கியது.
உணவு அருந்த வழியின்றி மக்கள்: இந்த வெள்ளநீரால் காலை முதல் பொதுமக்கள் வெளியே எங்கும் செல்ல முடியாமலும் உணவு அருந்த முடியாமலும் முடங்கினார்கள். மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் அண்பகம் திருப்பதி ஏற்பாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
பார்வையிட்ட அதிகாரிகள்: துணை ஆணையர் வினோத், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, சப் இன்ஸ்பெக்டர் கண்ணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து சேதங்களை பார்வையிட்டனர். கடந்த 2013ஆம் ஆண்டு இதேபோல இந்த ஓடையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஒரு குழந்தை உட்பட மூன்று பேர் இறந்தனர்.
இதையும் படிங்க: தீபாவளி விருந்தில் மாட்டிறைச்சி பிரியாணி, பன்றிக்கறி கிரேவி.. நரகாசுரனுக்கு வீரவணக்கம் செலுத்திய தபெதிக!
எதிர்க்கட்சித் தலைவர் கருத்து: இது குறித்து மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் அன்பகம் திருப்பதி கூறுகையில், “இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் ஏற்கனவே கடந்த 2013ஆம் ஆண்டு வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்டார்கள். அரசு சார்பில் அடுக்குமாடி குடியிருப்பு வழங்குவதற்கு பணம் செலுத்திய மக்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டன. ஆனால் இங்கே இருப்பவர்கள் பணம் செலுத்த முடியாத ஏழை கூலி தொழிலாளர்கள்”.
“பத்தாண்டுகளுக்கு முன்பு பெரும் உயிர் சேதமும், பொருள் சேதமும் ஏற்பட்ட பிறகும் இங்கேயே வசிக்கிறார்கள். அவர்களுக்கு வீடுகளுக்காக பணம் செலுத்த மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அந்தப் பணி அரசியல் காரணங்களால் கிடப்பில் போடப்பட்டு விட்டது. இந்த பொது மக்களுக்கு தனியாக இடம் வழங்க வேண்டும். இல்லாவிட்டால் அடுக்குமாடி குடியிருப்பு வழங்க மாநகராட்சி பணம் செலுத்த வேண்டும்” என்றார்.
உயிரிழந்த குழந்தையின் தாய் வேண்டுகோள்: இதையடுத்து கடந்த வெள்ளப்பெருக்கில் தனது குழந்தையை இழந்த வள்ளி என்பவர் கூறுகையில், “கடந்த வெள்ளப்பெருக்கின் போது எனது குழந்தையை இழந்தேன். தற்போது அதிகாலை 2 மணிக்கு ஏற்பட்ட வெள்ளத்தில் இன்னொரு குழந்தையை வைத்துக்கொண்டு உயிர் பிழைப்பதற்கு பெரிய கஷ்டப்பட்டோம். அரசு எங்களுக்கு இடமோ அல்லது வீடோ வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்