கோயம்புத்தூர்: கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா, நாற்பது தொகுதிகளிலும் திமுக கூட்டணிக்கு வெற்றியை அளித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தல் மற்றும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாராட்டு விழா என கொடிசியா மைதானத்தில் இன்று திமுக சார்பில் முப்பெரும் விழா நடைபெற உள்ளது.
இந்த நிகழ்வில் கலந்து கொள்ள கோவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை வந்துள்ளார். இந்நிலையில், கோவைக்கு வருகை தரும் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க திமுகவினர் திட்டமிட்டுள்ளனர். விழாவில் திமுக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சித் தலைவர்களும் பங்கேற்கின்றனர். இது தவிர, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40 நாடாளுமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்ற 40 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த விழாவில் பங்கேற்கவுள்ளனர்.
இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், விழா ஏற்பாடுகளை மேற்பார்வையிட மூத்த அமைச்சர்கள் முத்துசாமி, எ.வ.வேலு, ஆ.ராசா, சாமிநாதன் ஆகியோர் கோவையில் முகாமிட்டுள்ளனர். இன்று நடைபெறும் முப்பெறும் விழாவுக்கு கோவை மட்டுமின்றி, தமிழ்நாடு முழுவதிலும் இருந்து பங்கேற்க தொண்டர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேற்கு மண்டலம் திமுக வசம் தான் இருக்கிறது என்பதை பொதுமக்களுக்கு காட்டும் விதமாகவும், 28 ஆண்டுகளுக்குப் பிறகு கோவை மக்களவைத் தொகுதி திமுக வசம் வந்திருக்கும் வெற்றியை பறைசாற்றும் விதமாகவும் இந்த முப்பெரும் விழா பிரமாண்டமாக நடைபெறவுள்ளதாக திமுகவினர் கூறுகின்றனர்.
இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு, கோவை நகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், இன்று காலை முதல் கோவை மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர் ஆகிய பகுதிகளிலிருந்து விழாவிற்கு வரக்கூடிய கட்சியினரின் வாகனங்கள் அவினாசி சாலை நீலாம்பூர், சின்னியம்பாளையம், தொட்டிப்பாளையம் பிரிவு, சித்ரா சந்திப்பு, இஷ்கான் ரோடு வழியாகச் சென்று கொடிசியா மைதானத்திற்குச் செல்வதற்கு திருப்பி விடப்பட்டுள்ளது.
திருச்சி, கரூர், தாராபுரம், பல்லடம் மற்றும் தென் மாவட்டங்களிலிருந்து விழாவிற்கு வரக்கூடிய கட்சியினரின் வாகனங்கள் திருச்சி சாலையிலிருந்து, சூலூர் Y ரோடு சந்திப்பில் இருந்து சூலூர் குளம் முத்துக்கவுண்டன்புதூர் ரயில்வே பாலம் வழியாக அவினாசி சாலை சூலூர் பிரிவு அடைந்து நீலாம்பூர், சின்னியம்பாளையம், தொட்டிப்பாளையம் பிரிவு, சித்ரா சந்திப்பு மற்றும் இஷ்கான் ரோடு வழியாக சென்று கொடிசியா மைதானத்திற்கு செல்வதற்கு திருப்பி விடப்பட்டுள்ளது.
பழனி, உடுமலை, வால்பாறை, ஆனைமலை, பொள்ளாச்சி ஆகிய பகுதிகளிலிருந்து விழாவிற்கு வரக்கூடிய கட்சியினரின் வாகனங்கள் பொள்ளாச்சி சாலை எல் அண்ட் டி பைபாஸ், வெள்ளலூர் பிரிவு, வெள்ளலூர், சிங்காநல்லூர், காமராஜர் சாலை, அவினாசி சாலையை அடைந்து, டைடல் பார்க், தண்ணீர் பந்தல் ஜங்சன் வழியாக கொடிசியா மைதானத்திற்கு செல்வதற்கு திருப்பி விடப்பட்டுள்ளது.
வாளையார், க.க.சாவடி, நவக்கரை, எட்டிமடை ஆகிய இடங்களிலிருந்து விழாவிற்கு வரக்கூடிய கட்சியினரின் வாகனங்கள் பாலக்காடு சாலையிலிருந்து குனியமுத்தூர், ஆத்துப்பாலம், உக்கடம், சுங்கம் பைபாஸ், சுங்கம், இராமநாதபுரம் சிக்னல், புலியகுளம், அவினாசி சாலை அடைந்து டைடல் பார்க், தண்ணீர் பந்தல் ஜங்சன் வழியாக கொடீசியா மைதானத்திற்குச் செல்வதற்கு திருப்பி விடப்பட்டுள்ளது.
நீலகிரி, மேட்டுப்பாளையம், காரமடை, பெரியநாயக்கன்பாளையம் ஆகிய இடங்களிலிருந்து விழாவிற்கு வரக்கூடிய கட்சியினரின் வாகனங்கள் அன்னூர், குரும்பபாளையம், காளப்பட்டி நான்கு ரோடு அடைந்து விளாங்குறிச்சி, தண்ணீர் பந்தல் அடைந்து கொடிசியா மைதானத்திற்கு செல்வதற்கு திருப்பி விடப்பட்டுள்ளது.
துடியலூர், கணுவாய், தடாகம், ஆனைகட்டி ஆகிய இடங்களிலிருந்து விழாவிற்கு வரக்கூடிய கட்சியினரின் வாகனங்கள் சரவணம்பட்டி, விளாங்குறிச்சி, சேரன் மாநகர் வழியாக தண்ணீர் பந்தல் அடைந்து கொடிசியா மைதானத்திற்கு செல்வதற்கு திருப்பி விடப்பட்டுள்ளது.
அன்னூர், கோவில்பாளையம், குரும்பபாளையம் ஆகிய இடங்களிலிருந்து விழாவிற்கு வரக்கூடிய கட்சியினரின் வாகனங்கள் கோவில்பாளையம், காபிக்கடை, விளாங்குறிச்சி 4 ரோடு ஜங்ஷன் வழியாக சேரன்மாநகர் அடைந்து கொடிசியா மைதானத்திற்கு செல்வதற்கு திருப்பி விடப்பட்டுள்ளது.
எனவே, மேற்படி பகுதிகளுக்குச் செல்ல அல்லது மேற்படி சாலைகளின் வழியாக பயணங்களை மேற்கொள்ள இருக்கும் பொதுமக்கள், போக்குவரத்து நெருக்கடியை தவிர்த்து தாங்கள் செல்ல வேண்டிய பகுதிகளுக்கு எளிதில் செல்வதற்கு ஏதுவாக முன்கூட்டியே தங்களது பயண திட்டங்களை வகுத்துக் கொள்ளுமாறும், மாற்று வழிகளை உபயோகித்திக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இன்று திமுக முப்பெரும் விழா.. கூட்டணிக் கட்சி தலைவர்கள் பங்கேற்பு! - DMK Mupperum Vizha