சென்னை: அடையாறு ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்வதை அடுத்து ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வங்க கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் இன்று மாலை மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையை கடக்கும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. இதன்காரணமாக நேற்று இரவு முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் தொடர்ந்து இடைவிடாமல் கனமழை பெய்து வருகிறது.
அதே போல தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் முடிச்சூர், மண்ணிவாக்கம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது, இதனால் புறநகரில் உள்ள பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. பெரும்பாலான சாலைகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் தாழ்வான பகுதிகள் குடியிருப்புகளில் மழைநீர் சூழ்ந்து பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
இதையும் படிங்க: புயல் எதிரொலி: கனமழையில் மூழ்கிய நெற்பயிர்கள்! வேதனையில் திருவாரூர் விவசாயிகள்..
முடிச்சூர் சுற்றுவட்டார பகுதியில் ஆங்காங்கே குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் சில குடியிருப்பு வாசிகள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். மேலும், நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக அடையாறு ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தொடர்ந்து கன மழை நீடித்தால் அடையாறு ஆற்றில் வெள்ளநீர் அளவு அதிகரிக்கக் கூடும்.
எனவே சென்னையில் அடையாறு ஆற்றின் கரையோரம் ஈக்காடு தாங்கல், சைதாப்பேட்டை, கோட்டூர் புரம் உள்ளி்டட பகுதிகளில் வசிக்கும் மக்கள் வீடுகளை மூழ்கடிக்கும் அளவில் வெள்ள நீர் புகக்கூடும் என்று அச்சம் தெரிவிக்கின்றனர். ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களை அப்புறப்படுத்தி பாதுகாப்பாக தங்க வைக்க வேண்டும் என்றும், கரையோரங்களில் உடைப்பு ஏற்படாமல் தடுக்க மணல் மூட்டைகளை அடுக்கி வைக்க வேண்டும் என்றும் அடையாறு கரையோரம் வசிக்கும் மக்கள் கேடடுக் கொண்டுள்ளனர்.
கடந்த 2015ஆம் ஆண்டு கொள்ளளவு நிரம்பியதை அடுத்து செம்பரம்பாக்கம் ஏரி முன்னறிவுப்பு இன்றி அடையாறு ஆற்றில் திறந்து விடப்பட்டதால் ஆற்றின் கரையோரம் வசித்த மக்கள் மிகவும் துன்பத்துக்கு ஆளானர்கள். எனவே இந்த முறை அரசு முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றும் மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.