சென்னை: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் 156 பயணிகள், 8 விமான ஊழியர்கள், மொத்தம் 164 பேருடன் சென்னைக்கு நேற்று முன்தினம் மதியம் வந்து கொண்டு இருந்தது. இந்த விமானம் சென்னையில் பகல் 1.05 மணிக்கு தரையிறங்க வேண்டும்.
ஆனால், இந்த விமானம் முன்னதாகவே பகல் 12.40 மணிக்கு சென்னை விமான நிலைய வான்வெளி பகுதிக்கு வந்துவிட்டது. இதையடுத்து விமானம் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு, பகல் 12.42 மணிக்கு சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையிலிருந்து சிக்னல் கொடுக்கப்பட்டது.
அதன் பின்பு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் பகல் 12.43 மணிக்கு சென்னை பிரதான ஓடுபாதையில் தரையிறங்கியது. ஆனால், அந்த நேரத்தில் தரைக்காற்று அதிகமாக இருந்ததால், ஓடு பாதை தொடங்கும் இடத்திலேயே விமானம் தரையிறங்க முடியாமல் சிறிது தூரம் வந்து ஓடு பாதையில் தரை இறங்கியதால் விமானம் ஓடுபாதையில் ஓடி வேகத்தை குறைத்து திரும்புவது சிரமம் என்பதை விமானி உணர்ந்தார்.
இதையும் படிங்க: மஞ்சள் பையுடன் கிளம்பிய பஸ்.. நொறுங்கிப்போன மூதாட்டிக்கு உதவிய சிசிடிவி..! ஈரோட்டில் நெகிழ்ச்சி!
இதையடுத்து விமானி மிகுந்த துரிதமாக செயல்பட்டு, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு அவசர தகவலும் கொடுத்துவிட்டு உடனடியாக விமானத்தை ஓடுபாதையிலிருந்து உயரே எழும்பி வானில் வட்டமடித்து பறக்கத் தொடங்கியது. இதனால் விமானத்துக்குள் இருந்த பயணிகள் தரையிறங்கிய விமானம் மீண்டும் வானில் பறக்கத் தொடங்கி விட்டது என்று அதிர்ச்சி அடைந்தனர். ஆனால், பயணிகளுக்கு விமானம் அடுத்த சில நிமிடங்களில் மீண்டும் தரையிறங்கும் என்று அறிவிக்கப்பட்டது.
அதேபோல் வானில் சிறிது நேரம் பறந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மீண்டும் பகல் 12:58 மணிக்கு சென்னை விமான நிலைய முதலாவது பிரதான ஓடுபாதையில் பத்திரமாக தரையிறங்கி ஓடு பாதையில் ஓடி விமானம் நிற்க வேண்டிய இடத்தில் வந்து நின்றது. சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளும் நிம்மதி அடைந்தனர்.
முன்னதாக இந்த விமானம் பகல் 1.05 மணிக்கு சென்னையில் தரை இறங்க வேண்டியது. இந்த திடீர் பிரச்சனை காரணமாக மீண்டும் வானில் பறந்து விட்டு இரண்டாவது முறையாக சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கினாலும், குறிப்பிட்ட நேரத்தை விட 7 நிமிடங்கள் முன்னதாகவே வந்து தரை இறங்கி விட்டது. இச்சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்