விழுப்புரம்: நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு வரும் 27 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி. சாலையில் நடைபெற்றுள்ளது. அதற்கான மேடை அமைக்கும் பணி மற்றும் இதர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில், தொடர் கனமழை காரணமாக மாநாடு நடைபெறும் விக்கிரவாண்டி வி. சாலை பகுதியானது நீர் தேங்கி, சேறும் சகதியுமாக காணப்படுகிறது.
இதனால் மாநாட்டு பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், மாநாட்டு பணிகள் தடைபடும் சூழல் ஏற்பட்டுள்ளது.
மாநாட்டுக்கு இன்னும் 12 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், வரும் 27 ஆம் தேதிக்குள் மாநாட்டுக்கான பணிகளை திட்டமிட்டபடி முழுமையாக முடிக்க முடியுமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் திட்டமிட்டபடி மாநாடு நடைபெறுமா என்ற கேள்வியும் எழுகிறது.
முன்னதாக, மாநாட்டை கடந்த செப்டம்பர் மாதமே நடத்த திட்டமிட்ட நிலையில், அதற்கான அனுமதி கிடைத்தும், புதிய கால அவகாசம் இல்லாததால் மாநாடு தேதி தள்ளி அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் கனமழை காரணமாக மாநாட்டு ஏற்பாடுகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதால், தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: "283 அபாயகரமான பகுதிகள்..பருவமழையை எதிர்கொள்ள தயார்" - நீலகிரி ஆட்சியர் அறிவிப்பு!
இதனிடையே மாநாட்டுக்காக பந்தல் கால் நடப்பட்டு, மாநாட்டுத் திடலை சமன்படுத்தி, அப்பகுதியில் உள்ள 6 கிணறுகளுக்கு இரும்புத் தடுப்பு வேலி அமைக்கும் பணியும், மேடை அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இதனிடையே, மாநாட்டுப் பந்தலுக்காக இரும்பு பைப்புகளை ஏற்றி வந்த லாரி, மாநாட்டுத் திடலில் சேற்றில் சிக்கி நின்றது. பின்னர், அந்த லாரியை கிரேன் மூலம் அப்புறப்படுத்தினர்.
மாநாட்டுக்கு வரும் தொண்டர்களுக்கு உணவு, குடிநீர் தடையின்றி கிடைக்கும் வகையில் தனியார் கார்பரேட் நிறுவனத்திடம் அதற்கான பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது. இரு பாலருக்கும் 250 கழிவறை வசதிகளை அமைப்பதுடன், வாகனங்கள் நிறுத்த சாலையின் இரு புறங்களிலும் 50 ஏக்கர் அளவில் இட வசதியும் ஏற்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை துவங்கியுள்ள நிலையில், வானிலை பகிர்வுக்குழு, அவசர உதவிக்குழு, சமூக ஊடக குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்