திண்டுக்கல்: மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல் உலகளாவிய சுற்றுலாத் தலமாகும். கொடைக்கானலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் ஆண்டுதோறும் வருவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக போதை காளாண் குறித்து சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் பகிரப்படுவதால், அதை பார்த்துவிட்டும் சில சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலுக்கு வருவதாக கூறப்படுகிறது. இவ்வாறு வரக்கூடிய சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து போதை காளான் விற்பனை அதிகரித்து வருவதாகவும் தெரிகிறது.
குறிப்பாக, மேல்மலை கிராமப் பகுதிகளில் போதை காளான் விற்பனை சர்வ சாதாரணமாக நடந்து வருவதாக பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், போதை காளான் விற்பனை மற்றும் கஞ்சா விற்பனையை தடுப்பதற்கு கொடைக்கானல் போலீஸ் டிஎஸ்பி மதுமதி தலைமையில், கொடைக்கானல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் கடந்த இரண்டு நாட்களாக கொடைக்கானலில் உள்ள தங்கும் வகுதிகள், தனியார் காட்டேஜ்கள், டென்ட் ஹவுஸ்கள் உள்ளிட்ட பல இடங்களில் சோதனை செய்தனர்.
இதனையடுத்து, கொடைக்கானலில் போதை காளான் விற்ற 6 நபர்கள் கைது செய்யப்பட்டனர். இதேபோல, போதை காளான் உட்கொள்வதற்காக போதை காளான் கேட்டு வந்த கர்நாடகா, கேரளா, மும்பை உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 10 சுற்றுலாப் பயணிகளும் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து கொடைக்கானல் போலீஸ் டிஎஸ்பி மதுமதி செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “கடந்த சில தினங்களாக விடுதிகள் மற்றும் வாகன சோதனை செய்யப்பட்டது. போதை காளான் விற்பது சம்பந்தமான சமூக வலைத்தளங்கள் கண்காணிக்கப்பட்டு, அது பற்றி வீடியோ வெளியிடும் நபர்களின் கணக்குகள் முடக்கப்படும்.
போதை காளான் அதிகமாக விளையும் வனப்பகுதிகள் கண்டறியப்பட்டு, வனத்துறையினர் உடன் இணைந்து கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கொடைக்கானல் மேல் மலைப் பகுதியில் போலீஸ் அவுட் போஸ்ட் ஒன்று ஏற்படுத்தப்படும். போதை காளான் மற்றும் கஞ்சா விற்பவர்களின் கணக்குகள் முடக்கப்படும். இந்த போதைப் பொருட்கள் விற்கப்படும் மற்றும் பயன்படுத்தப்படும் விடுதிகள், அவர்கள் பயன்படுத்தக்கூடிய வாகனங்களும் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த சில மாதங்களாக சுமார் 100 பேர் போதை காளான் வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ளனர். காவல்துறையினர் விசாரணையில், கொடைக்கானல் பேரியைச் சேர்ந்த மணி, பாண்டியராஜன், ரகுபதி, மதுரையைச் சேர்ந்த சூர்யா மற்றும் மகேஸ்வரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைதாகியுள்ளனர்.
தொடர்ந்து 13 பேரை 75B வழக்குப்பதிவு செய்து விடுவித்தனர். போதை காளான் குறித்து தகவல்கள் பரிமாறும் நபர்கள், விற்கும் நபர்கள், சமூக வலைத்தளங்களில் பரப்பக்கூடிய தகவல்கள் உள்ளிட்டவை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை கடுமையாக மேற்கொள்ளப்படும்” எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 12 மாவட்டங்களுக்கு குறி வைத்துள்ள கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!