கடலூர்: நாட்டின் 18வது நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இந்த வாரம் வெள்ளிக்கிழமை முதல் (ஏப்ரல்.19) நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் அனல் பறக்கும் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். அது ஒரு புறம் இருக்கத் தேர்தல் ஆணையத்தின் சார்பில் 100 சதவீதம் வாக்குப் பதிவு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர்.
அந்தவகையில், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான அருண்தம்புராஜ் தலைமையில் பேரணி, மினி மாரத்தான், கலைநிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், முதன் முறை வாக்களிக்கும் வாக்காளர்களை ஊக்குவிக்கும் விதமாகவும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் கடலூர் சில்வர் பீச்சில் தொலைக்காட்சி பாடகர்கள் மானசி மற்றும் அரவிந்த் கர்ணீஸ்வரன் ஆகியோர் பங்கு பெற்ற இன்னிசை கச்சேரி நடைபெற்றது.
இதையும் படிங்க: வாக்காளர்களில் கவனத்திற்கு.. எந்தெந்த ஆவணங்களைக் கொண்டு வாக்களிக்கலாம் தெரிந்து கொள்ளுங்கள்..!
இந்நிகழ்ச்சியில் சினிமா பாடல்களுக்கு இடையே 100 சதவீதம் வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், அவ்வப்போது பெரிய திரையில் அது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் குறும் படங்களும் திரையிடுவதன் மூலமும் மக்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து டெல்லியில் இருந்த வந்த தனியார் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள், 250 டிரோன்களை வானில் பறக்க விட்டு, 100 சதவீதம் விழிப்புணர்வு ஏற்படும் வகையில் ஷோ நடத்தினர், ஒன்றாக வானில் பறந்த ட்ரொன்கள் இந்திய வரைபடம், தேர்தல் ஆணையத்தின் வரைபடம் போன்ற பல வடிவங்களில் டிரோன்கள பறக்கவிடப்பட்டன.
இதனை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்டு களித்தனர். கடலூர் மாவட்டத்தைப் பொருத்தவரை உள்ள 9 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. அதில் 10 லட்சத்து 53 ஆயிரத்து 112 ஆண் வாக்காளர்களும், 10 லட்சத்து 86 ஆயிரத்து 713 பெண் வாக்காளர்களும், 287 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 21 லட்சத்து 40 ஆயிரத்து 112 வாக்காளர்கள் உள்ளனர்.
இதையும் படிங்க: தமிழகம் முழுவதும் பூத் ஸ்லீப் வழங்கும் பணி 100% நிறைவு - சத்யபிரதா சாகு தகவல்!