கந்தனுக்குரிய விரதங்களில் மிகச் சிறந்த விரதமான மகா கந்த சஷ்டி விரதம், இந்தாண்டு நவம்பர் 2ம் தேதி முதல் தொடங்கி முருகப் பெருமானின் திருக்கல்யாணம் நடைபெறும் நவம்பர் 8ம் தேதி காலை வரை தொடர்கிறது. இந்நிலையில், இந்த 6 முதல் 7 நாட்களுக்கு முருகப் பக்தர்கள் விரதத்தை கடைப்பிடிப்பார்கள். இந்த நாட்களில் விரதத்தை கடைப்பிடிக்க முடியாதவர்கள், சஷ்டியின் கடைசி நாளில் விரதம் இருப்பார்கள். அதை எப்படி முறையாக செய்வது? என்பதை பார்க்கலாம்..
- ஒரு நாள் மட்டும் விரதம் இருக்க நினைப்பவர்கள், சஷ்டியின் 6வது நாள் காலையில் இருந்து மாலை வரை உபவாசம் இருக்கலாம். உடல் ஆரோக்கியத்தை பொருத்து பட்டினி விரதம், பால் பழம் போன்ற விரதங்களை மேற்கொள்ளலாம். விரதத்தின் போது உடலை நீரேற்றமாக வைத்திருக்க நிறைய தண்ணீர் குடிப்பது அவசியம்.
- காலை மற்றும் மாலையில் முருகனின் திருவுருவ படத்திற்கு, பூ, சந்தனம் மற்றும் குங்குமம் வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.
- காலையில் பால் மற்றும் பழத்தை முருகனுக்கு நெய்வேத்தியமாக படைக்கலாம்.
- சர்கோண தீபம், அதாவது 6 விளக்குகளை காலை மற்றும் மாலையில் ஏற்ற வேண்டும்.
- மாலை 4.30 மணிக்கு மேல், திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் நிகழும். இதனை தொலைக்காட்சி வாயிலாகவோ அல்லது வீட்டிற்கு அருகாமையில் இருக்கும் முருகன் கோயிலுக்கு சென்று பார்வையிடலாம்.
- விரதம் இருப்பவர்கள் சூரசம்ஹாரம் முடிந்ததற்கு பின் கட்டாயமாக குளிக்க வேண்டும். அதன் பின்னர் முருகனின் திருவுருவப் படத்திற்கு 6 தீபங்கள் ஏற்றி நெய்வேத்தியம் படைத்து வழிபட்டு விரதத்தை முடித்துக்கொள்ளலாம்.
- எளிமையாக நெய்வேத்தியம் படைக்க வேண்டும் என்றால், பால் மற்றும் பழத்தை வைத்து விரதத்தை நிறைவு செய்யலாம். இல்லையென்றால், 6 வகையான சாதம் செய்து முருகனுக்கு படைக்கலாம். சர்க்கரை பொங்கல், புளி சாதம், தயிர் சாதம், லெமன் சாதம், புதினா சாதம், கற்கண்டு சாதம் என உங்களால் செய்ய முடிந்த சாதங்களை செய்யலாம். இவற்றில், ஒன்று தான் செய்ய முடியும் என்றால், சர்க்கரை பொங்கல் செய்து படைக்கலாம்.
- 6 நாள் விரதம் இருப்பவர்கள்,8ம் தேதி காலை முருகன் கோயிலுக்கு சென்று திருக்கல்யாணத்தை பார்த்த பின்னர் விரதத்தை முடிக்கலாம். சூரஸ்சம்ஹாரம் முடிந்த மாலை, கோயிலில் கொடுக்கப்படும் நெய்வேத்தியத்தை தாரளமாக உட்கொள்ளலாம்.
தானம் கொடுக்க வேண்டும்: ஒரு நாள் விரதம் இருப்பவர்கள் முதல் 6 நாள் விரதம் இருப்பவர்கள் வரை, சஷ்டியின் கடைசி நாளில் தானம் கொடுப்பது நல்லது. பால் முதல் எதாவது ஒரு உணவு வரை தங்களால் முடிந்தவற்றை மற்றவர்களுக்கு தானமாக கொடுக்கலாம்.
பொறுப்புத் துறப்பு: சஷ்டி விரதம் இருப்பவர்கள், தங்கள் உடலுக்கு ஏற்ற முறையை தேர்வு செய்து விரதம் இருக்க வேண்டும். கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் விரதத்தை தவிர்க்க வேண்டும்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்