சென்னை: பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னை நந்தனம், YMCA மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். அதன்பேரில், பிரதமர் மோடி சென்னை வருகையையொட்டி சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்வது குறித்து சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தலைமையில், கூடுதல் காவல் ஆணையாளர்கள், இணை ஆணையாளர்கள் மற்றும் துணை ஆணையாளர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
சென்னை பெருநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில், சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையர்கள், காவல் இணை ஆணையர்கள், காவல் துணை ஆணையர்கள், உதவி ஆணையாளர்கள், சட்டம் ஒழுங்கு குற்றப்பிரிவு, போக்குவரத்து மற்றும் சிறப்பு பிரிவுகளின் காவல் அதிகாரிகள், ஆளிநர்கள், ஆயுதப்படை, கமாண்டோ, தமிழ்நாடு சிறப்பு காவல் படை காவல் ஆளிநர்கள் உள்பட 15,000 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுடன் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும், பிரதமர் நிகழ்ச்சி நடைபெறும் சென்னை, நந்தனம் YMCA மைதானம், சென்னை விமான நிலையம் மற்றும் சுற்றுப்புறங்களிலும், சென்னையில் செல்லும் வழித்தடங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, தீவிர சோதனைகள் மற்றும் கண்காணிப்பு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், சென்னையில் உள்ள லாட்ஜுகள், தங்கும் விடுதிகள், நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் விடுதிகளிலும் சோதனைகள் மேற்கொண்டு, சந்தேக நபர்கள் மற்றும் அந்நிய நபர்கள் உள்ளனரா என கண்காணித்து வருகின்றனர். மேலும், முக்கிய சாலைகள் மற்றும் சந்திப்புகளில் தீவிர வாகன சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இது தவிர, சென்னையில் உள்ள முக்கிய ரயில் நிலையங்கள், பேருந்து முனையங்களிலும் காவல்துறையினர் மூலம் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். பிரதமர் வருகையையொட்டி, சென்னை பெருநகர காவல் ஆணையர் உத்தரவின்பேரில், 144-இன் கீழ் சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் வருகை - சென்னையில் போக்குவரத்து மாற்றம்: பிரதமர் மோடி நாளை மாலை 5 மணியளவில் ஒய்.எம்.சி.ஏ நந்தனத்தில் நடைபெறும் "தாமரை மாநாடு" என்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னை வருகிறார். இந்த கூட்டத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் கட்சியினர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமரின் சென்னை வருகையின்போது, விழா நடைபெறும் இடங்களைச் சுற்றியுள்ள சாலைகளான அண்ணாசாலை, ஒய்.எம்.சி.ஏ. நந்தனம் முதல் அண்ணா மேம்பாலம் வரை மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாக சாலைப் பயணிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
பிரதமரின் வருகையையொட்டி, விழா நடைபெறும் அதைச் சுற்றி உள்ள சாலைகளில் குறிப்பாக அண்ணாசாலை, எஸ்.வி பட்டேல் சாலை, காந்தி மண்டபம் சாலை, ஜிஎஸ்டி சாலை, மவுண்ட் பூந்தமல்லி சாலை, சிபெட் சந்திப்பு மற்றும் 100 அடி சாலை வரை போக்குவரத்து சிறிதளவு நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆகையால், வாகன ஓட்டிகள் தங்களது பயணத்தை இந்த சாலைகளைத் தவிர்த்து, மாற்று வழியில் செல்ல திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பிற்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை வணிக வாகனங்கள் இந்த சாலைகளில் செல்ல தடை செய்யப்படும். மத்யகைலாஷ் முதல் ஹால்டா சந்திப்பு வரை, இந்திரா காந்தி சாலை பல்லாவரம் முதல் கத்திப்பாரா சந்திப்பு, மவுண்ட் பூந்தமல்லி சாலை ராமாபுரம் முதல் கத்திப்பாரா சந்திப்பு வரை, அசோக் பில்லர் முதல் கத்திப்பாரா சந்திப்பு, விஜயநகர் சந்திப்பு முதல் கான்கார்ட் சந்திப்பு வரை (கிண்டி), அண்ணா சிலை முதல் மவுண்ட் ரோடு வரை தேனாம்பேட்டை, நந்தனம் காந்தி மண்டபம் சாலையில் வணிக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படும்.
எனவே, வாகன ஓட்டிகள் தங்கள் இலக்கை அடைய அதற்கேற்ப பயணத்தை திட்டமிடுமாறு சென்னை போக்குவரத்து காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்படுகிறது. மேலும், பிரதமர் வருகையை ஒட்டி, சென்னை பெருநகரில் மார்ச் 1 மற்றும் ஏப்ரல் 29 அன்று டிரோன்கள் மற்றும் இதர வான்வழி டிரோன்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாதுகாப்பு காரணமாக தற்காலிக தடை விதிக்கப்பட்ட டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை சார்பாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அய்யா வைகுண்டர்; ஆளுநர், அண்ணாமலைக்கு அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் கண்டனம்!