சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 101வது பிறந்தநாளையொட்டி சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில், அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலையின் கீழ் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள படத்திற்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு தொடங்குகிறது. திராவிடம், திராவிடத்தின் பெருமை ஆகியவற்றை கலைஞர் கருணாநிதி மறக்காமல் தினந்தோறும் வழங்கிக் கொண்டிருந்தார்.
அவர் தனி மனிதரல்ல. தந்தை பெரியாரின் தத்துவத்தின் மறு வடிவம் மற்றும் செயலாக்கம். மக்கள் இன்று ஆட்சி மாற்றம் வேண்டும் என்பதை உணர்ந்த காரணத்தினால், தான் கடைசி நேரம் வரை இழுத்துப் பார்க்கலாம் என்று திட்டமிடுகிறார்கள்.
கருத்து திணிப்புகளை திட்டமிட்டு ஏற்பாடு செய்துள்ளார்கள். எந்த கருத்து திணிப்பாக இருந்தாலும், அது ஏடுகளில் வருமே தவிர, மக்கள் உள்ளங்களில் பிரதிபலிக்காது. மக்கள் உள்ளத்தின் பிரதிபலிப்பு நாளை தெரியவரும். இருள் நீக்கும் உதயசூரியன் மட்டுமல்ல. அது ஒளி வீசும் சூரியனாக வரக்கூடிய வாய்ப்பு இந்தியா முழுவதும் கிடைக்கும்” என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அக்கட்சியின் அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜுன்ராஜ் கலைஞர் கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்தினார். இதையடுத்து பேசிய மதிமுக அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜுன்ராஜ்,"மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சார்பில் கலைஞர் கருணாநிதிக்கு எங்களது மரியாதையை செய்திருக்கிறோம். தமிழகம், புதுச்சேரி உட்பட 40 இடங்களில் திராவிடம் வென்றது. மத வெறி ஓய்ந்தது.
பிறந்தநாள் பரிசை கொடுக்க தமிழகம் காத்துக் கொண்டிருக்கிறது. 40 தொகுதிகளிலும் வென்று இந்தியா கூட்டணிக்கு வலு சேர்க்க உள்ளோம். தமிழகம் திராவிட பூமி, திராவிட கொள்கை வென்றெடுக்கும் பூமி என்பதை பறைசாற்றும் வகையில் எங்களுடைய காரியங்கள் தொடரும்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியர் ஸ்ரீஜித் கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன்! - Kalakshetra Issue