கோயம்புத்தூர்: கோவையைச் சேர்ந்த பிரபல மருத்துவர் சி.பழனிவேலுவின் சுயசரிதையைச் சொல்லும் 'கட்ஸ்' புத்தக வெளியீட்டு விழா, கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று (ஜூலை 27) நடைபெற்றது. இதில், புத்தகத்தை டாடா குழுமத்தின் இயக்குனர் சந்திரசேகரன் வெளியிட்டார்.
இந்நிகழ்வில் சி.பி.ஐ முன்னாள் இயக்குனர் கார்த்திகேயன், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இஸ்ரோ முன்னாள் இயக்குநர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், நாம் தமிழர் கட்சி தலைமமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது, “ஒரு மாணவன் மருத்துவராவது சாதாரண நிகழ்வு. ஆனால், ஒரு தொழிலாளி மருத்துவராவது என்பது மிகப்பெரிய ஒன்றாகும். ஜெம் பழனிவேலு பள்ளிக்கல்வியை இடையில் நின்றவர். மீண்டும் படிப்பை தொடர்ந்து வெற்றியடைந்துள்ளார். மனிதாபிமானம் அதிகமுள்ள மருத்துவராக திகழ்கிறார்” எனக் கூறினார்.
தொடர்ந்து, டாடா குழும இயக்குனர் சந்திரசேகர் பேசுகையில், “ஒருவர் எங்கு பிறக்கிறார் என்பது முக்கியமில்லை. அவர் எந்த நிலையை அடைகிறார் என்பதிலேயே அவரது வாழ்க்கையின் வெற்றி இருக்கிறது. சூழ்நிலைகள் நம்மை மாற்ற முடியாது. அதை எப்படி எதிர்கொள்கிறோம் என்பதிலிருந்து தான் வெற்றி கிடைக்கும். மருத்துவர் பழனிவேலு, பிச.ராய் விருது உள்ளிட்ட உலகின் மிகப்பெரிய விருதுகளை பெற்றுள்ளார். ஒருவர் வெற்றிகரமானவராக உருவாவதற்கு அஞ்சாமை, ஈகை, அறிவு, ஊக்கம் ஆகிய நான்கு குணங்கள் வேண்டும் என்று திருவள்ளுவர் கூறியுள்ளார். அந்த குணங்கள் இவரிடம் உள்ளது” என்றார்.
பின்னர், மருத்துவர் பழனிவேலு நிகழ்ச்சியில் பேசுகையில், “கடந்த நூற்றாண்டில் பல்வேறு தலைவர்கள், நிபுணர்கள் குறித்த புத்தகங்கள் வெளிவந்தன. ஆனால், மருத்துவர்கள் குறித்து எந்த புத்தகமும் வரவில்லை. இந்த குறையைப் போக்க அகில இந்திய மருத்துவர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கம் ஒன்றில், மருத்துவத் துறையில் சாதனை புரிந்தவர்களின் வாழ்க்கை வரலாறுகளை தொகுத்து ஒரு நூலை வெளியிட்டிருந்தனர். அதில், எனது வாழ்வில் நடந்த சம்பவங்களும் சில பக்கங்களில் வெளியாகியிருந்தது. அதற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. அதன் பின்னரே முழு புத்தகம் எழுதும் எண்ணம் வந்தது.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமைச் சந்தித்த போது, அவர் எனது வாழ்க்கை வரலாறை எழுத ஊக்குவித்தார். அதனால் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை எழுதினேன். மருத்துவப் படிப்பிற்கான கட்டணத்தை எனது கிராமத்தினர் செலுத்தினர். எனது கல்விக்கு ஆசிரியர்கள் தான் அடித்தளம் அமைத்தனர். எனது வெற்றிக்குப் பின்னால் இவர்கள் இருக்கின்றனர் என்பதை நன்றியுடன் தெரிவிக்க இந்த புத்தகம் எழுதினேன்” என்றார்.
முன்னதாக, நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒருவரை ஒருவர் கட்டியணைத்து வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். அதுபோல் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி, தங்கமணி ஆகியோர் அண்ணாமலையிடம் கைகுலுக்கிச் சென்றனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: "ஓசூர் ஏர்போர்ட்" பிள்ளையார் சுழி போட்ட தமிழ்நாடு அரசு! - hosur international airport