சென்னை: தமிழ்நாடு டெங்கு கொசுப்புழு ஒழிப்பு முன்களப் பணியாளர்கள் சங்கம் மற்றும் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் சார்பில் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில், மருத்துவத்துறை பணியாளர் கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் ஏ.ஆர்.சாந்தி, தமிழ்நாடு டெங்கு கொசுப் புழு ஒழிப்பு முன்களப் பணியாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜெயவேல், செயலாளர் அ.சதீஷ், பொருளாளர் க.பூமிநாதன், மாநில துணைச் செயலாளர் ஆர்.குணசேகரன், எம்.வெங்கடாச்சலம், எம்.செந்தில் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத், "தமிழ்நாடு டெங்கு கொசு ஒழிப்பு முன்களப் பணியாளர்கள் (DBC - Dengue Breeding Checkers) கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகம் முழுவதும் சுமார் 38,000 பேர் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.
நிவாரணப் பணி: நீரினால் பரவும் நோய்கள், டைபாய்டு, காலரா, வாந்தி, பேதி, அனைத்து விதமான அம்மை நோய்கள் மற்றும் அனைத்து விதமான வைரஸ் காய்ச்சல்கள் பரவும்போது அவற்றை தடுப்பதற்கான பணியிலும் இப்பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். மழை, வெள்ளம், புயல் பாதிப்பின் போது சேதமடைந்த பகுதிகளில் நிவாரணப் பணிகளைச் செய்கின்றனர்.
தினக்கூலி அடிப்படையில் ஊதியம்: இந்த 38,000 DBC பணியாளர்களும் உள்ளாட்சித்துறை மூலமாக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் டெங்கு கொசு ஒழிப்பு முன்களப் பணியாளர்களாக பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களுக்கு தினக்கூலி அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுகிறது. நகராட்சி, பேரூராட்சிகளில் தினக்கூலியாக ரூ.200, ரூ.250, ரூ.300, ரூ.440 வரை மாறுபட்ட ஊதியம் வழங்கப்படுகிறது.
சம வேலைக்கு சம ஊதியம்: இவர்களை முழுமையாக மருத்துவத் துறையின் கீழ் கொண்டுவர வேண்டும். கொசுப்புழு ஒழிப்புப் பணிக்கு சற்றும் தொடர்பில்லாத வேலைகளை செய்யச் சொல்லி வற்புறுத்தப்படுகிறார்கள். இதனால் கொசுப்புழு ஒழிப்பு பணி பல நேரங்களில் பாதிக்கப்படுகிறது. எனவே, தினக்கூலி முறையை கைவிடவேண்டும். மாத ஊதியம் வழங்கிட வேண்டும். ஊதியத்தை கால தாமதமின்றி மாதாமாதம் வழங்கிட வேண்டும். கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட வேண்டும்.
பணி நிரந்தம்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு படி, DBC பணியாளர் என வகைப்படுத்தி ஊதியம் சில இடங்களில் வழங்கப்படுகிறது. அதுபோன்று அனைத்து மாவட்டங்களிலும் வழங்கப்பட வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் மாதம் ரூ.21,000 வழங்கிட வேண்டும். பணி நீக்கம் செய்யக்கூடாது, பணி பாதுகாப்பு வழங்கிட வேண்டும், பணி நிரந்தம் வழங்கிட வேண்டும்.
மருத்துவத்துறையின் கீழ் பணி அமர்த்தல்: கொசுப்புழு அழிப்பு உள்ளிட்ட நோய்த்தடுப்பு பணியைச் செய்யும் DBC பணியாளர்களை பல்வேறு அமைப்புகளின் கீழ் பணி செய்ய விடாமல், இவர்களின் பணிக்கு பொருத்தமான மருத்துவத் துறையின் கீழ் மட்டும் பணி செய்ய ஏதுவாக மருத்துவத் துறையின் கீழ் பணி அமர்த்திட வேண்டும். மருத்துவத்துறை மூலம் ஊதியம் வழங்கிட வேண்டும்.
தமிழகம் முழுவதும் தெருநாய் பிரச்னை அதிகரித்து வருகிறது. இதனால் வெறி நோய் (ரேபிஸ்) என்ற உயிர்க்கொல்லி நோயின் அபாயம் அதிகரித்து வருகிறது. எனவே, தெரு நாய் பிரச்னையை சரி செய்வதற்கு கடுமையான நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும்.
அரசு மருத்துவமனைகளில் மருத்துவ நிபுணர்கள் மற்றும் துணை மருத்துவப் பணியாளர்களுடைய எண்ணிக்கையும் மிகவும் குறைவாகவே உள்ளது. எனவே, நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய பணியிடங்களை உருவாக்கி மருத்துவர்கள், மருத்துவத்துறை பணியாளர்களை நியமிக்க வேண்டும்.
தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் மருத்துவத்துறைப் பணியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். அரசு மருத்துவமனைகளிலும் தாய்ப்பால் வங்கி துவக்கி செயல்படுத்த வேண்டும். எம்ஆர்பி தேர்வில் தேர்வானவர்களுடைய ரேங்க் லிஸ்ட்டை வெளியிடும் பொழுது, அவர்களுடைய கம்யூனிட்டி ரேங்க் வெளிப்படையாக தெரிவிக்கப்படுவதில்லை.
எனவே, தேர்வு முடிவுகள் வெளியிடும் பொழுது தேர்ச்சி பெற்றவர்களுக்கு பொதுவான ரேங்க் பட்டியலையும், வகுப்பு வாரியான ரேங்க் பட்டியலையும் வெளிப்படையாக வெளியிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகின்ற 30ஆம் தேதி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், சென்னை எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டரங்கம் நுழைவு வாயில் அருகில் நடைபெறும்” என்றார்.
இதையும் படிங்க: தவெக தலைவராக நாளை மாணவர்களைச் சந்திக்கிறார் விஜய்.. சென்னை விரையும் மாணவர்கள்! - Vijay Meet Students