தென்காசி: 2024 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, அனைத்து தொகுதிகளிலும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், தென்காசி மாவட்டத்தில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் என அனைவரும் தங்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் கட்சி வேட்பாளர்களுடன், தினசரி சந்திப்பை நடத்தி வருகின்றனர்.
தென்காசி மாவட்டத்தில் மீண்டும் திமுகவே வெற்றி பெறும் என்ற வகையில், தென்காசி தொகுதிக்கு கூட்டணி கட்சியை அறிவிக்காமல், திமுக நேரடியாக போட்டியிடும் என அறிவிப்பு வெளியிட்டது. இதனால் தென்காசி தொகுதி பொதுமக்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் மிகவும் உற்சாகமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், தென்காசி மாவட்டத்தில் அதிமுகவிற்கும், திமுகவிற்கும் அதிகப்படியான போட்டி நிலவும் என ஆலங்குளம் சேர்மன் திவ்யா மணிகண்டன் கூறியுள்ளார். மேலும், தென்காசி மாவட்ட பகுதியில் அதிகப்படியான விவசாய பெருமக்கள் உள்ளதால், வரும் நாடாளுமன்றத் தேர்தலில், திமுகவினருக்கு அதிகப்படியான வாக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
மேலும், இது தொடர்பாக ஈடிவி பாரத் ஊடகத்திற்கு ஆலங்குளம் சேர்மன் திவ்யா மணிகண்டன் கூறுகையில், “நாடாளுமன்றத் தேர்தலில் வென்று விட வேண்டும் என்பதற்காக பெட்ரோல் மற்றும் கேஸ் விலையை குறைத்துள்ளனர். இதையெல்லாம் தமிழ்நாட்டு மக்கள் கண்டு கொள்ள மாட்டார்கள்.
மீண்டும் தென்காசி மட்டுமல்லாமல், அனைத்து தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும். தென்காசி மாவட்டத்தைப் பொறுத்தவரை, நூற்றுக்கு நூறு சதவீதம் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெறும். இப்பகுதியில் உள்ள பீடி சுற்றும் தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில், இஎஸ்ஐ மருத்துவமனையை அமைத்துக்கொடுக்க வேண்டும்” எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.