தூத்துக்குடி: பொது பட்ஜெட்டில் தமிழகத்திற்கு எந்த திட்டத்தையும் செயல்படுத்தாமல் தமிழகத்தை வஞ்சித்துவிட்டதாக மத்திய பாஜக அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் இன்று (ஜூலை 27) காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திமுக தலைமை அறிவித்தது.
இதைத் தொடர்ந்து, தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகில், திமுகவின் தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி தலைமையில் திமுகவினரின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட திமுகவினர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்ட கூட்டத்தில் பேசிய கனிமொழி, "நிதிநிலை அறிக்கை என்பது இரு மாநிலங்களுக்கு மட்டுமே அறிவித்துள்ளார்கள். ஏதோ ஒரு மாநிலத்தின் நிதிநிலை அறிக்கை என்பது போல் உள்ளது. தொடர்ந்து, உரிமைகளை பறித்துக் கொண்டும், மாநில வரிகளை பறித்துக் கொண்டும் மாநிலங்களுக்கு வரவேண்டிய நிதியை தரவில்லை என்றால் மாநிலத்தை எப்படி நிர்வகிப்பது? மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை எவ்வாறு நிவர்த்தி செய்வது?" என கேள்வி எழுப்பினார்.
மேலும் தொடர்ச்சியாக பேசிய அவர், "தங்களது ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்வதற்கான முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. தங்களுக்கு வாக்களிக்காத மக்களை வஞ்சிக்கின்ற ஆட்சியாக மத்திய பாஜக ஆட்சி செயல்படுகிறது. சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு குறைவான நிதியே மத்திய அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகம் மட்டுமின்றி, கிராமப்புறங்களில் இருக்கின்ற சாமானிய மக்களை ஏமாற்றக்கூடிய ஒரு பட்ஜெட் தான் இந்த மோடி ஆட்சியினுடைய பட்ஜெட். பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக அவர்களை பாதுகாக்கின்ற பட்ஜெட்டாக இந்த பட்ஜெட் உள்ளது.
பணக்கார முதலாளிகளை வளர்த்து விடுகின்ற திட்டங்கள் மட்டுமே உள்ளது. இப்படி மக்கள் விரோத பட்ஜெட்டாக பாஜகவின் பட்ஜெட் உள்ளது. தமிழ்நாடு மக்களுக்கு எதிராக உள்ள இந்த மத்திய பாஜக அரசை விரைவில் பதவியில் இருந்து இறக்கிக் காட்ட வேண்டும்" என்று கூறினார்.
சென்னை: சென்னையில் ஆளுநர் மாளிகை அருகே சின்னமலையில் சென்னை தெற்கு மாவட்டம் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட உரையாற்றிய தமிழச்சி தங்கபாண்டியன், "நம்முடைய நிதியை, தாருங்கள் என்று கையை ஏந்தி பிச்சை கேட்காமல் தைரியமாக தலை நிமிர்ந்து கேட்போம். நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக பலமுறை தமிழகம் வந்த மோடியால் தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற இயலவில்லை.
வட மாநிலங்களுக்கு இயற்கை பேரிடர் காலங்களில் தமிழகம் சார்பில் உதவிகள் செய்துள்ளது. ஆனால், இங்கு நடந்த பேரிடர் நிவாரணமாக எதையும் மத்திய அரசு ஒதுக்கவில்லை. சுயமரியாதை மண்ணாக இருக்கும் தமிழகத்தைத் தொடர்ந்து மத்திய பாஜக அரசு வஞ்சித்து வருகிறது.
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சுமார் 1000த்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஜெகத்ரட்சகன், "தமிழகத்தில் இருந்து அதிகப்படியான வரியை பெறுகின்ற மத்திய அரசு, உள்நோக்கத்துடன் பீஹார், ஆந்திராவுக்கு மட்டும் அதிகளவில் நிதியைப் பகிர்ந்தளித்துள்ளது. தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்குக் கூட உரிய நிதியை வழங்காமல் ஏமாற்றி விட்டது" என்று குற்றஞ்சாட்டினார்.
கோயம்புத்தூர்: கோவையில் மத்திய அரசைக் கண்டித்து திமுகவினர் டாடாபாத் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். இதில் 500க்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர். மத்திய பாஜக அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்தாக கூறி கண்டன பதாகைகளை ஏந்தியபடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக கோவை மாவட்ட செயலாளர்கள் நா.கார்த்திக், ரவி, தளபதி முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்.பி ராஜ்குமார் தலைமை வகித்தார். மேலும், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, துணைமேயர் வெற்றிச்செல்வன், திமுக மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலி: மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கப்படாததைக் கண்டித்து நெல்லை மாவட்ட ஒருங்கிணைந்த திமுக சார்பில் நெல்லை ரயில் நிலையம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழக மக்களுக்கு நிதி ஒதுக்கப்படாததை எடுத்துக் கூறும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் திமுகவினர் அல்வா மற்றும் முட்டை வழங்கினர்.
தேனி: தேனி பழைய பேருந்து நிலையம் அருகே தேனி மாவட்ட காங்கிரஸ் தலைவர் முருகேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி வழங்காததைக் கண்டித்தும், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை கண்டித்தும் காங்கிரஸ் கட்சியினர் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: “பத்து பதினஞ்சு நாளா அலையுறோம்.. பருப்பு இருந்தா பாமாயில் இருக்கிறதில்ல..” கோவில்பட்டி அருகே வேதனை!