சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி இசை அமைப்பாளராக வலம் வரும் இளையராஜா சுமார் ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். தலைமுறைகள் கடந்தும் இப்போதுள்ள இசை அமைப்பாளர்களுக்குச் சிம்மசொப்பனமாகத் திகழ்பவர் இளையராஜா. இவரது மகன்கள் கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா இருவரும் இசை அமைப்பாளர்களாகத் தமிழ் சினிமாவில் சிறந்து விளங்கி வருகின்றனர்.
மகள் பவதாரிணியும் தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக ஏராளமான வெற்றிப் பாடல்களைப் பாடியுள்ளார். இதற்கிடையில் புற்றுநோய் காரணமாக இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை மேற்கொண்டு வந்த பவதாரிணி கடந்த 25ம் தேதி திடீரென காலமானார்.
இது திரை பிரபலங்கள் மற்றும் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இவரது குரலில் பாரதி படத்தில் இடம்பெற்ற 'மயில் போல பொண்ணு ஒன்னு' என்ற பாடல் அனைவரது விருப்பப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் பாடலை பாடியதற்காகச் சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதைப் பெற்றார்.
குறிப்பாக ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் தனுஷ் நடித்த அனேகன் படத்தில் இவர் பாடிய 'ஆத்தாடி ஆத்தாடி' என்ற பாடல் அனைவரின் விருப்பப்பட்டியலில் இடம்பெற்றிருந்தது. இப்படிப் பிரமிக்கவைக்கும் குரலில் பல்வேறு வெற்றிப் பாடல்களைக் கொடுத்த பவதாரிணி எதிர்பாராத விதமாகக் காலமானதையடுத்து, திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் என ஏராளமானோர் தங்களது இறுதி அஞ்சலியைச் செலுத்தினர்.
இந்த நிலையில் பவதாரிணி மறைவுக்கு திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி சென்னை தியாகராஜா நகர் உள்ள இல்லத்தில் இன்று (பிப்.15) நேரில் சென்று பிரபல இசையமைப்பாளரான இளையராஜா மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவிற்கு ஆறுதல் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அஜித் பவார் தரப்பே உண்மையான அணி - மகாராஷ்டிர சபாநாயகர் அதிரடி அறிவிப்பு!