சென்னை: தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி நூற்றாண்டை சிறப்பிக்கும் வகையில், இந்திய மத்திய அரசு 100 ரூபாய் நாணயம் வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், இன்று மாலை நடைபெற்ற விழாவில், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்னை கலைவாணர் அரங்கில் நாணயத்தை வெளியிட்டார். இந்த நிலையில், கருணாநிதியின் உருவம் பொறித்த நாணயத்தில் இந்தி எழுத்து ஏன் இருக்கிறது என்றும், திமுக - பாஜக கள்ள உறவு வைத்துள்ளது என எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி கருத்துக்கு திமுக எம்பி ஆ.ராசா பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளப்பதிவில், “என்ன ஆச்சு எடப்பாடி பழனிசாமிக்கு? முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டை சிறப்பிக்கும் வகையில் மத்திய அரசு 100 ரூபாய் நாணயம் வெளியிட்டு சிறப்பித்திருக்கிறது. இந்த விழாவுக்கு ராஜ்நாத் சிங் ஏன் வருகிறார், ராகுல்காந்தியை ஏன் எதற்கும் அழைப்பதில்லை என்று அவர் எடப்பாடி பழனிசாமி கேட்டிருக்கிறார்.
*என்ன ஆச்சு எடப்பாடி பழனிச்சாமிக்கு?*
— A RAJA (@dmk_raja) August 18, 2024
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டை சிறப்பிக்கும் வகையில் இந்திய ஒன்றிய அரசு 100 ரூபாய் நாணயம் வெளியிட்டு சிறப்பித்திருக்கிறது. இந்த விழாவுக்கு ராஜ்நாத் சிங் ஏன் வருகிறார், ராகுல்காந்தியை ஏன் எதற்கும் அழைப்பதில்லை என்று அவர் எடப்பாடி…
இந்தியாவில் நாணயம் மற்றும் ரூபாய் நோட்டுகளை வெளியிடுவது மத்திய அரசு என்பதால், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராக உள்ள ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு சிறப்பிப்பதில் என்ன பிரச்சினை எடப்பாடி பழனிசாமிக்கு? கலைஞரின் உருவம் பொறித்த நாணயத்தில் இந்தி எழுத்து ஏன் இருக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி கேட்பதால் அவருக்கு என்ன ஆச்சு என்ற கவலை மேலும் அதிகரிக்கிறது.
இந்தியாவில் உள்ள நாணயங்கள் எதுவாக இருந்தாலும் அதில் ஆங்கிலமும், இந்தியும் இருப்பது வழக்கம். எம்ஜிஆருக்கு நாணயம் வெளியிடப்பட்டிருப்பதையும் அதிலும் இந்தி எழுத்துகள் இருப்பதையும் கூடவா எடப்பாடி பழனிசாமி அறியவில்லை? கலைஞர் அவர்களுக்காக வெளியிடப்பட்டுள்ள நாணயத்தில்தான் 'தமிழ் வெல்லும்' என்ற எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளது. இதைக்கூட உணராமல் எடப்பாடி பழனிசாமி உளறியிருப்பதால் அவரை எந்த லிஸ்ட்டில் சேர்ப்பதில்லை எனப் புரியவில்லை.
எதையாவது சொல்ல வேண்டும் என்பதற்காக, தமிழ்நாடு அரசின் சார்பில்கலைஞருக்கு நிறுவப்பட்ட சிலையை, பாஜக தலைவராக ஒரு காலத்தில் இருந்த இந்திய குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்ததை இப்போது விமர்சிக்கிற எடப்பாடி பழனிசாமி. திமுக சார்பில் அண்ணா அறிவாலயத்தில் நிறுவப்பட்ட கலைஞர் சிலையைத் திறந்து வைத்தது காங்கிரஸ் தலைவராக இருந்த அன்னை சோனியா காந்தி என்பதையாவது அறிவாரா?
உறவுக்கு கை கொடுப்போம் - உரிமைக்கு குரல் கொடுபபோம் என்பதே கலைஞர் எங்களுக்கு கற்றுத் தந்திருக்கும் அரசியல் இலக்கணம். அந்த வகையில்தான் மத்திய அரசின் நாணயம் வெளியீட்டு விழாவும், ஆளுநரின் தேநீர் விருந்தும் நடைபெற்றது. திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், தமிழ்நாட்டிற்குரிய நிதியை வழங்காமலும்-தமிழ்நாட்டிற்கானத் திட்டங்களை செயல்படுத்தாமலும் வஞ்சிக்கும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எதிர்க்கட்சித் தலைவர் ஒருமுறையாவது படித்துப் பார்க்கட்டும்.
ஆதரித்தாலும், எதிர்த்தாலும் அதில் உறுதியாக இருக்கின்ற இயக்கம் திமுக என்பதை இந்தியாவின் பிரதமராக இருந்த இந்திராகாந்தி, முத்தமிழறிஞர் கலைஞரின் தலைமைப் பண்பு குறித்து பாராட்டியிருக்கிறார்.அதிமுகவைப் போல பாஜகவுடன் கள்ளக்கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் எங்களுக்கில்லை. பாஜகவை எப்படியாவது தமிழ்நாட்டில் வளரச் செய்ய வேண்டும் என்று சொந்தக் கட்சியான அதிமுகவையே அழித்துக்கொண்டிருக்கிறார். அவரது நாடகத்தை பொதுமக்கள் நம்பமாட்டார்கள்.
அத்திக்கடவு-அவினாசி திட்டம் என்பது மேற்கு மாவட்ட மக்களின் நெடுங்கனவு. அதனை 1972ஆம் ஆண்டில் முதன்முதலில் செயல்படுத்த முனைந்தவர் கலைஞர். அதன் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளையும், ஒவ்வொரு முறையும் திமுக ஆட்சி அமைந்தபோது மேற்கொள்ளப்பட்ட செயல்பாடுகளையும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியில் அந்தத் திட்டம் எப்படி செயல்படுத்தப்பட்டது என்பதை மேற்கு மாவட்ட மக்கள் அறிவார்கள்.
அதனால், மேற்கு மாவட்ட மக்களும், விவசாயிகளும் முதலமைச்சர் அவர்களுக்கு தங்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். திராவிட மாடல் ஆட்சியின் முதல்வர் தலைமையிலான அரசுதான் உறுதியான நடவடிக்கைகள் மூலம் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை நிறைவேற்றியுள்ளது. கலைஞர் அவர்களை இந்திய ஒன்றியமே கொண்டாடுவதையும், மேற்கு மாவட்ட மக்களின் நெடுங்காலக் கனவை திராவிட மாடல் அரசு நிறைவேற்றியிருப்பதையும் பொறுத்துக் கொள்ள முடியாமல் ‘காந்தாரி’ போலக் கதறுகிறார் எடப்பாடி பழனிசாமி. பதற்றத்தில் அவர் பேசுவதெல்லாம் பிதற்றலாக உள்ளது” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: “திமுக - பாஜக ரகசிய உறவு.. ராகுல் காந்தியை வைத்தே நாணயம் வெளியிடலாம்”.. ஈபிஎஸ் கடும் சாடல்!