கரூர் : தமிழகத்தில் திமுக தலைமையிலான அமைச்சரவையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயதீர்வைத் துறை அமைச்சராக இருந்து வந்த செந்தில் பாலாஜி, அமலாக்கத் துறையால் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பான வழக்கில், கடந்த 2023ம் ஆண்டு ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்டார். பின்னர் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சைக்கு பின்னர் மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
கடந்த 471 நாட்களாக சிறையில் இருந்தபடி, செந்தில் பாலாஜிக்கு 59வது முறையாக நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் பலமுறை செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. இதன் பின்னர் டெல்லி உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்கள் விசாரணை நிறைவுற்று, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கு தொடர்பான தீர்ப்பு இன்று அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கி தீர்ப்பு வழங்கியது. இதனை அடுத்து கரூரில் திமுகவினர் பட்டாசுகள் வெடித்து பல்வேறு பகுதிகளில் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க : செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்.. உச்ச நீதிமன்றம் விதித்த நிபந்தனைகள் என்ன?
முன்னதாக கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா பகுதியில் திமுக நிர்வாகிகள் பட்டாசுகள் வெடித்து, ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கரூர், குளித்தலை, அரவக்குறிச்சி, புகலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திமுக நிர்வாகிகள் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் வரவேற்பு தெரிவித்தனர்.
இதனிடையே கரூர் மாவட்டத்தில் உள்ள திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு, செந்தில்பாலாஜியை வரவேற்கும் விதமாக சமூக வலைத்தளங்களில், ரீல்ஸ் வீடியோக்கள் வெளியிட்டு, செந்தில் பாலாஜியை எதிர்நோக்கி காத்திருப்பதாக பதிவிட்டு வருகின்றனர்.
தமிழக அமைச்சரவையில் செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்பார் என்ற சூழ்நிலை நிலவுவதால், கரூர் மாவட்டத்தில் உள்ள திமுக தொண்டர்கள் மட்டுமல்லாது கொங்கு மண்டலத்தில் உள்ள கோவை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்