சென்னை: ஏழு கட்டங்களாக நடக்கவிருக்கும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு தொடங்குகிறது. இந்த நிலையில், திமுக தரப்பில் தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் தேர்தல் அறிக்கையை இன்று அண்ணா அறிவாலயத்தில் வைத்து வெளியிடப்பட்டது.
முன்னதாக, தேர்தல் அறிக்கையை தயாரிக்க, திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையிலான குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு, தேர்தல் அறிக்கையைத் தயாரிக்க மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பொதுமக்களிடம் கருத்து கேட்டு, அதன் அடிப்படையிலேயே தேர்தல் அறிக்கையை தயார் செய்திருந்தது. அதனை முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.
அதில், தூத்துக்குடி மாவட்டத்திற்கு இடம் பெற்றுள்ள முக்கிய வாக்குறுதிகள்:
- தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து ஏற்படுத்தி தரும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
- தூத்துக்குடி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
- முத்துநகர் விரைவு ரயிலை போல், சென்னை செல்ல மேலும் ஒரு ரயில் சேவை ஏற்படுத்தப்படும்.
- தூத்துக்குடி வி.எம்.எஸ் நகரில் ஐந்தாவது ரயில்வே கேட் மற்றும் மேம்பாலம் அமைக்கப்படும்.
- நாசரேத் பகுதியில், கடந்த 21 ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்ட திருச்செந்தூர் கூட்டுறவு நூற்பாலை அமைந்திருந்த இடத்தில், பொதுமக்களும், சிறு, குறு வியாபாரிகளும் பயன்பெறும் வகையில் மாற்றுத் தொழிற்சாலை அமைத்து, இப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவும், இங்குள்ள வணிகர்களின் வாழ்வாதாரத்தைக் காத்திடவும் ஆவண செய்யப்படும்.
- நாசரேத்திலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் பிடாரனேரி கிராமத்தில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டை அமைந்துள்ள பகுதியில், புதிய தொழில் நிறுவனங்களை நிறுவி, அப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி, வாழ்வாதாரம் காத்திட ஆவண செய்யப்படும்.
- காயல்பட்டினம் மற்றும் மீளவிட்டான் ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படும்.
- தூத்துக்குடியில் உற்பத்தியாகும் பனை பொருள்களுக்கு மதிப்பு கூட்டி ஏற்றுமதி செய்ய வழிவகை செய்யப்படும்.
- டெல்லி - மும்பை இடையே செயல்படுத்தியுள்ள பிரத்யேக விரைவு போக்குவரத்து தடத்தைப் (dedicated freight corridor) போன்று சென்னை, கோயம்புத்தூர், தூத்துக்குடி ஆகிய நகரங்களை இணைத்து ஒரு விரைவு சரக்கு போக்குவரத்து தடம் புதிதாக செயல்படுத்தப்படும்.
- திருநெல்வேலியைத் தலைமை இடமாகக் கொண்டு திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களை உள்ளடக்கிய புதிய ரயில்வே கோட்டம் அமைக்க ஆவண செய்யப்படும்.
இதையும் படிங்க: "வாக்குகள் குறைந்தால் நடவடிக்கை தான்!" மா.செ.க்களை எச்சரித்த மு.க.ஸ்டாலின்