கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாக இருந்த விஜயதரணி, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். பின்னர் எம்எல்ஏ பதவியை அவர் ராஜினாமா செய்தார். அதன் பிறகு, குமரி மாவட்டத்திற்கு முதல்முறையாக இன்று வந்தார்.
அப்போது கட்சியினர் அவருக்கு சால்வை அணிவித்து வரவேற்றனர். முன்னதாக அவர் வந்த காரில் இருந்து இறங்காமல் அமர்ந்திருந்தார். அப்போது, மாவட்ட தலைவர் தர்மராஜ் அருகில் சென்று கேட்டபோது, 2 நிமிடம் காத்திருந்து எமகண்டம் முடிந்த உடன் காரில் இருந்து இறங்குவதாக கூறி உள்ளார்.
இதனால் பா.ஜ.க தொண்டர்கள், விஜயதரணி காரில் இருந்து இறங்கி வரும் வரை காத்திருந்தனர். எமகண்டம் முடிந்த உடன் காரில் இருந்து இறங்கிய விஜயதரணிக்கு, மாவட்ட பா.ஜ.க., சார்பில் சால்வை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் நாகர்கோவிலில் உள்ள பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை முன்னாள் எம்எல்ஏ விஜயதாரணி சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "தமிழக அரசு மகளிர் உரிமைத் தொகை தருவதை வரவேற்கிறேன். ஆனால், மகளிர் உரிமைத் தொகையை பெறுபவர்கள் அதிகமாக திமுக கட்சியை சேருந்தவர்களாக உள்ளனர். ஜெயலலிதா கொண்டு வந்த திருமண நிதி, தாலிக்கு தங்கம் திட்டத்திற்கான நிதியை ஏன் நிறுத்தினார்கள்? இந்த பாரபட்சத்தை பற்றிதான் குஷ்பு பேசி” உள்ளதாக தெரிவித்தார்.
மேலும், தனது அரசியல் பயணம் குறித்து அவர் கூறும்போது, “குமரி மாவட்டம் மக்கள் நலன் கருதி, நான் பாரதிய ஜனதா கட்சியிலிருந்து தொடர்கிறேன். தேசிய நலன் காக்கும் கட்சியாக பாரதிய ஜனதா கட்சியும், நாட்டில் உள்ள அனைத்து மக்களையும் ஒருங்கிணைத்து சாதனை படைத்து வருகிறார் பிரதமர் மோடி.
2024 தேர்தலில் மோடி தலைமையில்தான் ஆட்சி அமையும் என்பது எதிர்கட்சிக்காரர்களுக்கும் நம்பிக்கை வந்துவிட்டது. நான் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. மூன்று முறை விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி இருக்கிறேன்.
என் குடும்பம் பாரம்பரியமாக 80 ஆண்டு காலம் காங்கிரஸில்தான் இருந்து வருகிறோம். என் முன்னோர்கள் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள். 1999ஆம் ஆண்டில் இருந்தே நாடாளுமன்ற சீட் ஒதுக்கும்படி கேட்டு வருகிறேன். ஆனால், காங்கிரஸ் கட்சி எனக்கு ஒதுக்காமல் என்னை சட்டமன்ற தொகுதிக்கு சீட்டு தந்து, எனக்கு முக்கியத்துவம் தராமல் இருந்தார்கள்.
சட்டமன்றத்தில் கூட காங்கிரஸ் கட்சியும், திமுகவும் இணைந்து கூட்டு சதிகள் செய்கிறார்கள். ஜெயலலிதா காலத்தில் பெண்களுக்கு முன்னுரிமை தந்தார்கள். ஆனால், பெண்களுக்கு முக்கியத்துவம் இல்லாத ஒரு ஆட்சியை தமிழகத்தில் திமுக நடத்தி வருகிறது.
இன்று பாரதிய ஜனதா கட்சி, அதன் வளர்ச்சியை பார்த்தால், பெண்களின் பங்களிப்பு அதிகமாக உள்ளது. பெண்களுக்கு மிக முக்கியத்துவம் தருகிறார்கள். பெண்களின் தலைமைப் பண்பை மறுக்கின்ற கட்சியாகத்தான் காங்கிரஸ் இருந்து வருகிறது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மனைவியிடம் கேட்காமல் யாரிடம் கேட்பது? - தன் மீதான விமர்சனத்திற்கு சரத்குமார் தன்னிலை விளக்கம்!