விழுப்புரம்: விழுப்புரம் அருகே ஆயந்தூர் மற்றும் ஆ.கூடலூர் கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றி வருபவர் சாந்தி. இவர் அதே பகுதியில் நாடாளுமன்றத் தேர்தலின் போது தேர்தல் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்துள்ளார். அப்போது தேர்தல் பணியாளர்களுக்கு உணவு வாங்குவதற்காக, அருகில் உள்ள உணவு விடுதிக்குச் சென்றுள்ளார். அதே பகுதியில் உணவு வாங்குவதற்காக முகையூர் திமுக மாவட்ட கவுன்சிலர் ராஜீவ் காந்தியும் வந்துள்ளார்.
கிராம நிர்வாக அலுவலர் சாந்தி ஏற்கனவே தான் ஆர்டர் செய்த உணவு பொட்டலங்களை வாங்கிக்கொண்டு தேர்தல் பணியில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு கொடுப்பதற்கு ஆயந்தூர் கிராமத்திற்கு வந்துள்ளார். அப்போது, அங்கு மதுபோதையில் வந்த திமுக கவுன்சிலர் ராஜீவ் காந்தி, நான் ஆர்டர் செய்த உணவை எப்படி நீ வாங்கலாம் எனக் கேட்டு, அவருடன் தகராறில் ஈடுபட்டு, அவரை தாக்கியதாக முதல் தகவல் அறிக்கை எண் 14609244-இல் கூறப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து அங்கிருந்தவர்கள், கிராம நிர்வாக அலுவலரை ஆம்புலன்ஸ் மூலமாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிகிச்சை பெறச் செய்துள்ளனர். இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் சாந்தி, கானை போலீசாரிடம் அளித்த புகாரின் பேரில், திமுக கவுன்சிலர் ராஜீவ் காந்தி மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, இன்று அதிகாலை முகையூர் திமுக மாவட்ட கவுன்சிலர் ராஜீவ் காந்தியைக் கைது செய்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், பெண் கிராம நிர்வாக அலுவலரை, திமுக கவுன்சிலர் தாக்கிய சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
-
விழுப்புரம் மாவட்டத்தில், கடந்த ஏப்ரல் 19 நாடாளுமன்றத் தேர்தல் நாளன்று, திமுக நிர்வாகி ராஜீவ் காந்தி என்ற நபர், பெண் கிராம நிர்வாக அலுவலர், சகோதரி திருமதி சாந்தி அவர்களை, கன்னத்தில் அறைந்தும், வயிற்றில் எட்டி உதைத்தும் கொடூரமாகத் தாக்குதல் நடத்தியுள்ளது மிருகத்தனமானது. வன்மையாகக்…
— K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) April 26, 2024
அதில் அவர் கூறியுள்ளதாவது, “விழுப்புரம் மாவட்டத்தில்,கடந்த ஏப்ரல் 19 நாடாளுமன்றத் தேர்தல் நாளன்று, திமுக நிர்வாகி ராஜீவ் காந்தி என்ற நபர், பெண் கிராம நிர்வாக அலுவலர் சாந்தியை கன்னத்தில் அறைந்தும், வயிற்றில் எட்டி உதைத்தும் கொடூரமாக தாக்குதல் நடத்தியுள்ளது மிருகத்தனமானது. வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, பாட்டாளி மக்கள் கட்சியினர், தேர்தல் பிரச்சார விதிகளை மீறியதாகப் பொய்ப் புகார் அளிக்க மறுத்ததால், அதன் தொடர்ச்சியாக, தேர்தல் நாளன்று, இந்தக் கொடூரமான தாக்குதலை நடத்தியிருக்கிறார் திமுக நிர்வாகி ராஜீவ் காந்தி.
ஆட்சிக்கு வரும் முன்னர், தெருத் தெருவாக சென்று மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஆட்சிக்கு வந்த பிறகு, தனது கட்சியினரைச் சிறிய அளவில் கூட கண்டிக்காதது தான், அரசு அதிகாரிகளுக்கு, குறிப்பாக, பெண் அதிகாரிகளுக்கு எதிரான திமுகவினரின் தொடர் அராஜகத்திற்குக் காரணம்.
பெண் கிராம அலுவலரை எட்டி உதைத்துத் தாக்கிய திமுக நிர்வாகி ராஜீவ் காந்தியைக் காவல்துறையினர் கைது செய்துள்ளதாகத் தெரிகிறது. அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: சொத்துக்காக தந்தையை கொடூரமாக தாக்கிய மகன்.. அதிர்ச்சியூட்டும் வீடியோ! - Perambalur Father Attack Video