திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சியின் 25வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினராக சிவா என்பவர் செயல்பட்டு வருகிறார். இவரது தந்தை நாகராஜ் என்ற சரவணன் ஆவார். இவர் இன்று (பிப்.26) பாறைப்பட்டி பகுதியில் உள்ள தனது வீட்டில் இருந்து மக்கான் தெரு பள்ளிவாசல் அருகே இரண்டு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த மர்ம நபர்கள் நாகராஜ் மீது மிளகாய்ப் பொடி தூவியுள்ளனர்.
இதனால் நாகராஜ் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது அந்த மர்ம நபர்கள் தன்னை தாக்கவருவதை அறிந்த நாகராஜ் எழுந்து ஓட துவங்கிய போது ஓட ஓடப் பட்ட பகலில் பொதுமக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள பகுதியில் அந்த மர்ம நபர்கள் மறைத்து வைத்திருந்த கூர்மையான ஆயுதங்களைக் கொண்டு சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர் என்று கூறப்படுகிறது.
இதனை அடுத்து அப்பகுதியில் உள்ள மக்கள் இந்த படுகொலை குறித்துக் காவல் துறைக்கு தகவல் அளித்துள்ளனர். கிடைக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தெற்கு காவல் நிலைய போலீசார், உயிரிழந்த நாகராஜின் உடலைக் கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலமாக உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர்.
இதன் தொடர்ச்சியாக, தெற்கு காவல் நிலைய போலீசார் இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பட்ட பகலில் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் அதிகம் நடமாட்டம் உள்ள பகுதியில் மர்ம கும்பல் கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் இப்பகுதி பொது மக்களிடையே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: "தமிழையும், தமிழ்நாட்டையும் மதிக்கக் கூடிய ஆட்சியை அமைக்க வேண்டும்" - கனிமொழி எம்.பி!