கோவை: நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் வரும் 17ஆம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பிரச்சாரத்தில் வேட்பாளர் சிலர் ஒட்டலில் தோசை சுட்டும், டீ போட்டுக் கொடுத்தும், பஜ்ஜி சுட்டும் என வித்தியாசமான முறையில் வாக்கு சேகரித்து வருகின்றனர்.
அந்த வகையில் கோவை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து திமுக ஐடி விங்க் சார்பில் பத்திரிக்கை அடித்து மேள தாளங்களுடன் சென்று நூதன முறையில் பிரச்சாரம் மேற்கொண்டனர்.
திமுக ஒன்றிய செயலாளர் அன்பரசு தலைமையில் கோவை தென்னம்பாளையம் அடுத்த அரசூர் பகுதியில் உள்ள கோவிலுக்கு மேளதாளங்களுடன் சென்று வழிபாடு நடத்தினர். தொடர்ந்து முக்கிய வீதிகளில் மகளிர் அணியினர் படை சூழ கொங்கு முறைப்படி பொதுமக்களைச் சந்தித்து, தாம்பூலம் தட்டுடன் சென்று பத்திரிக்கை கொடுத்து வாக்குகள் சேகரித்தனர்.
மாப்பிள்ளை கோவை திமுக நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் கணபதி ராஜ்குமார் எனவும் அவரது மணப்பெண் மக்கள் அளிக்கக்கூடிய வெற்றி எனவும் எனக் கூறி வாக்குகள் சேகரித்தனர். இதனை அடுத்து திமுக அரசு செய்துள்ள இலவச பேருந்து திட்டம், மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் மகளிர் உரிமை தொகை திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் குறித்து பொதுமக்களிடம் கூறி திமுகவிற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டனர்.
அதேபோல் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியக் கூட்டணி வெற்றி பெற்றால் இன்னும் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தப்படும் எனவும் கூறி வாக்கு சேகரித்தனர். இந்த வாக்கு சேகரிப்பின் போது அனைத்து மக்களும் வாக்களிக்க வேண்டும் 100% வாக்குப்பதிவு எட்ட வேண்டும் எனப் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதாக திமுகவினர் கூறினர்.
மேலும், இந்த பிரச்சாரத்தில் சூலூர் தொகுதி பொறுப்பாளரும் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினருமான அருண்குமார் திமுக தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் ரமேஷ் பாலன் மற்றும் மகளிர் அணியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: கொரியன் ஸ்கின் டோன் வேண்டுமா.? அரிசி கழுவின தண்ணீர்தான் தீர்வு.! - Rice Water For Hair And Skin Care