கோயம்புத்தூர்: 2024 நாடாளுமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி, வேட்பாளர் அறிவிப்பு என தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன.
அந்த வகையில், மக்களின் ஓட்டை எப்படி சேகரிப்பது என்பது குறித்து கட்சி தலைமைகளும் பல வியூகங்களை வகுத்து வருகின்றன. அதன்படி, தங்கள் சொந்த கட்சிகளின் சாதனைகளையும், போட்டிக் கட்சிகளின் குறைகளையும் பொதுக்கூட்டம் போட்டும், பிரசாரம் செய்தும் பொதுமக்களின் கவனத்திற்கு கொண்டு சேர்க்கும் வேலைகளானது மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், கருமத்தம்பட்டி நால்ரோட்டில் பொதுமக்களுக்கு உளுந்து வடை சுட்டு வழங்கிய திமுகவினர், "பிரதமர் மோடி வாயிலேயே நன்கு வடை சுடுவதாகவும், அறிவித்த நலத் திட்டங்கள் எதையும் செயல்படுத்தவில்லை" என்றும் கூறி நூதனப் பிரசாரத்தை நேற்று (திங்கட்கிழமை) முன்னெடுத்தனர்.
அதில், 'மோடி சுட்ட வடைகள்' என சில திட்டங்களைத் துண்டு சீட்டில் பட்டியலிட்டு, அந்த துண்டி சீட்டிலேயே வடையை வைத்து பொதுமக்களுக்கு வழங்கி பிரசாரம் மேற்கொண்டனர். மேலும், சாலையோரத்தில் திமுகவினரால் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனரில், கடந்த 10 ஆண்டு கால பாஜக ஆட்சியில் பிரதமர் மோடியால் அறிவிக்கப்பட்ட நதிகள் இணைப்பு உள்ளிட்ட 15 திட்டங்களை பட்டியலிட்டு விமர்சனம் செய்திருந்தனர்.
இது குறித்து திமுகவினர் கூறுகையில், "பல திட்டங்கள் அறிவித்த நிலையில் அதை செயல்படுத்தாமலேயே செயல்படுத்தியதாகப் போலி விளம்பரத்தை பாஜகவினர் செய்து வருகின்றனர். அதோடு, தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிதியை வழங்காமல் இழுத்தடித்து, நலத்திட்டங்கள் பொதுமக்களுக்கு சென்றடையாத வகையில் மத்திய அரசு செயல்படுகிறது" எனக் குற்றம் சாட்டினர்.
தற்போது, பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்துக்காக இரண்டாவது முறையாக தமிழகம் வந்துள்ள நிலையில், திமுகவினரின் வடை சுட்டு பொதுமக்களுக்கு வழங்கும் நூதனப் பிரசாரம் குறித்த வீடியோ மற்றும் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: கல்பாக்கத்தில் அமைய இருக்கும் ஈனுலை.. பிரதமர் மோடி விழாவை முதல்வர் புறக்கணித்தது ஏன்.. அறிவியலா? ஆபத்தா?