சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில், கோவையில் நேற்று (மார்ச்.18) நடைபெற்ற பிரதமரின் வாகனப் பேரணியின் போது பள்ளி மாணவர்களைப் பயன்படுத்தியது தொடர்பாகவும், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் நடைபெற்ற ஒரு தனியார் நிகழ்ச்சியில் மதத்தின் பெயரில் ஓட்டு சேகரித்தது தொடர்பாகவும், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில், திமுக செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் சரவணன், தலைமைத் தேர்தல் அதிகாரியை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தார்.
இதன் பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த வழக்கறிஞர் சரவணன் கூறியதாவது, "திமுக சார்பாக இரண்டு புகார்கள் தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின், நிர்மலா சீதாராமன் சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் மதத்தின் பெயரால் ஓட்டு சேகரித்துள்ளார்.
"நமது கோயிலையே அழிக்கக் கூடிய, நமது கோயிலையே சுரண்டித் தின்னக் கூடிய, நமது மதத்தையே அழிப்பேன் என்று சொல்லக்கூடிய கட்சிக்கெல்லாம் ஏன் ஓட்டுப் போடுகிறீர்கள்" என நிர்மலா சீதாராமன் பேசி இருக்கிறார்.
தேர்தல் நன்னடத்தை விதிகளின் படி, மதத்தின் பெயரால் ஓட்டு கேட்கக் கூடாது என கூறுகிறது. ஆனால், அதை மீறி வேண்டுமென்றே நிர்மலா சீதாராமன் அப்படி ஒரு பேச்சை பேசியிருக்கிறார். இதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் அடிப்படையில், மதத்தின் பெயரால் ஓட்டு கேட்கக் கூடாது என்றும், மதத்தின் பெயரால் பிரச்சாரம் செய்யக் கூடாது என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. அதையும் நிர்மலா சீதாராமன் மீறி இருக்கிறார். இந்த சட்ட மீறல்களுக்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த புகார் மனுவைப் பரிசீலனை செய்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமைத் தேர்தல் அதிகாரி கூறி இருக்கிறார்.
அதேபோல, பிரதமர் நேற்று (மார்ச் 18) கலந்து கொண்ட வாகனப் பேரணியில் பள்ளி மாணவர்கள் அழைக்கப்பட்டு, அங்கே அவர்களுக்கு காவித் துண்டுகள் போடப்பட்டு, பாஜகவைப் புகழ்ந்து பாடல்கள் எல்லாம் பாடி இருக்கிறார்கள். குழந்தைகளை எந்தவித தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்தக்கூடாது என்று கூறப்பட்டு இருக்கக்கூடிய நிலையில், பாஜக தன்னுடைய இருப்பை காட்டுவதற்காக, குழந்தை முதல் பெரியவர்கள் வரை பாஜகவிற்கு ஆதரவு இருக்கிறது என்று காட்டுவதற்காக தேர்தல் நடத்தை விதியை மீறி இருக்கிறது.
இது குழந்தை தொழிலாளர்கள் தடைச் சட்டத்தின் படி குற்றமாகும். இதை ஏற்பாடு செய்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் வலியுறுத்தி இருக்கிறோம். புகார் மனுவைப் பெற்றுக் கொண்ட தலைமைத் தேர்தல் அதிகாரி, புகார் மனு பரிசீலனை செய்து தக்க நடவடிக்கை எடுப்பார் என நம்பிக்கை இருக்கிறது" என கூறினார்.
இதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், “பிரதமர் மோடி நேற்று கோவையில் கலந்து கொண்ட வாகனப் பேரணியில் பள்ளி மாணவர்கள் 50க்கு மேற்பட்டோர் அழைத்து வந்தது, தேர்தல் விதிமுறை மீறல் ஆகும். எனவே, இது தொடர்பாக தேர்தல் அதிகாரி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: "பெண்களே பாஜகவின் பாதுகாப்புக் கவசம்”.. மீண்டும் ஜெயலலிதாவை மேற்கோள் காட்டிய மோடி!