ராணிப்பேட்டை: சோளிங்கர் பேருந்து நிலையத்தில், தேமுதிகவின் 20ஆம் ஆண்டு துவக்க விழாவையும், கேப்டன் விஜயகாந்த் 72வது பிறந்த நாளை முன்னிட்டு பொதுக்கூட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக விஜயபிரபாகரன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது பொதுமக்களிடையே பேசிய அவர், “வருங்காலத்தில் நம்ம எல்லாரும் பார்க்கப் போகிறோம். 2005 இந்த கட்சியை விஜயகாந்த் ஆரம்பிக்கும் பொழுது, அந்த மாநாட்டில் 35 லட்சம் பேர் கலந்து கொண்டார்கள். அப்படிப்பட்ட கட்சி தேசிய முற்போக்கு திராவிட கட்சி.
எல்லாருமே கிண்டலும், கேலியும் செய்கிறார்கள், தேமுதிக என்பது முன்பு போல் இல்லை, ஒரு சதவீத வாக்கு வாங்கி மட்டுமே வைத்துள்ளது என மக்களிடம் தவறான தகவலைப் பரப்புகின்றனர். ஆனால், இன்றைக்கும் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு தினமும் பத்தாயிரம் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
விஜயகாந்த் எப்போதும் தனக்கு பொறுப்புகள் வேண்டாம், மக்களுக்கு நல்லது செய்தால் போதும் எனக் கூறுவார். தற்போது நாங்களும் அதே நிலைப்பாட்டில் உள்ளோம். தமிழகத்தில் தற்போது ஆளும் அரசு பொதுமக்களுக்குத் தேவையான நல்லதைச் செய்யவில்லை.
விஜயகாந்த் மறைந்த பிறகு தேமுதிக என்ற கட்சி காணாமல் போய்விடும் என விமர்சனம் செய்தார்கள். அப்படியானால் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளை ஆரம்பித்தவர்கள் மறைந்த பிறகு இன்றளவும் செயல்பட்டு வருகிறதே எப்படி? எனக் கேள்வி எழுப்பினார்.
அவர்களுக்கும் (திமுக), நமக்கும் ஒன்றும் பெரிய வித்தியாசம் கிடையாது. அவர்களிடம் பணம் உள்ளது, நம்மிடம் இல்லை, அவ்வளவுதான் வித்தியாசம் என்றார். தமிழகத்தில் தற்போது ஆளும் அரசு பொதுமக்களுக்குத் தேவையான நல்லதைச் செய்யவில்லை எனவும், அதனால் தான் புதுப்புது கட்சிகளும், தலைவர்களும் உருவாகி வருவதாக கூறினார்.
குறிப்பிட்ட வேகத்திற்கு மேல் இருசக்கர வாகனத்திலும், பிற வாகனங்களிலும் சென்றால் பொதுமக்களுக்கு அபராதம் விதிக்கும் அதே அரசு, பார்முலா ரேஸ் எனும் பந்தயத்தின் மூலமாக மக்கள் பணத்தில் 500 கோடி ரூபாய் வரை வீணாக்கி அவசியமில்லாத கார் பந்தயத்தை நடத்துவதாக" விமர்சித்தார்.
இதையும் படிங்க: அம்பத்தூரில் ஆர்டர் செய்த உணவை வழங்காமல் மோசடி; ரூ.1.67 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!