கோயம்புத்தூர்: பல்வேறு கட்சி நிகழ்வுகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், இன்று (ஞாயிற்றுக்கிழமை) கோவைக்கு வந்தார். அங்கு செய்தியாளர்களைச் சந்தித்து அவர் கூறியதாவது, “தமிழகத்தில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயத்தால் 65 உயிர்களை இழந்துள்ளோம்.
டாஸ்மாக் சரக்கில் கிக் இல்லை: இந்தச் சூழலில் மிக முக்கிய பொறுப்பில் இருக்கும் மூத்த அமைச்சர் சட்டமன்றத்தில் பேசுகையில், சரக்கில் கிக் இல்லாததால் தான் மக்கள் கள்ளச்சாராயம் நோக்கிச் செல்கிறார்கள் என்று மிக மிக ஒரு மோசமான பதிவை பதிய வைத்ததை தேமுதிக வன்மையாக கண்டிக்கிறது. முதலமைச்சர் முன்பாக மூத்த அமைச்சர் சட்டமன்றத்தில் என்ன பேசுவது என்று தெரியாமல், சரக்கில் கிக் இல்லை என்று கூறுவது கிறுக்குத்தனமான செயல்.
முழு சாட்சி திமுக: கள்ளச்சாராயம் வரக்கூடாது என்பதற்காகத்தான் தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகளை நடத்தி, ஆண்டு முழுவதும் ரூ.45 ஆயிரம் கோடி சம்பாதித்து, மக்கள் உயிரை பணயம் வைத்து இன்றைக்கு ஒட்டுமொத்த தமிழகத்தையும் குடிகாரர்களாக மாற்றிய பெருமைதான் இந்த ஆட்சியாளர்களுக்கு இருக்கிறது. 69 உயிருக்கும் முழு சாட்சி திமுக தான்.
தமிழ்நாடு எதை நோக்கிச் செல்கிறது?: டாஸ்மாக்கில் தரம் இல்லை என்பதை அமைச்சரே ஒப்புக்கொள்கிறார். கள்ளக்குறிச்சி மட்டுமல்லாமல், பொள்ளாச்சியிலும் ஒரு நிகழ்வு நடந்துள்ளது. முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் இறந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் கொடுத்து வாய் அடைத்து விடுகிறார்கள். அனைத்து இடங்களிலும் டாஸ்மாக் கடை திறக்கும் அரசால் ஏன் காவல் நிலையங்களை திறக்க முடியாது? தமிழ்நாடு எதை நோக்கிச் செல்கிறது? தமிழ்நாட்டு மக்கள் நல்ல ஆட்சி எது, நல்ல தலைவர்கள் யார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
பணம் மட்டுமே பிரதானம்: விருதுநகரில் பட்டாசு ஆலையில் 4 உயிர்கள் பலியாகியுள்ளது. சென்னையில் கழிவுநீருடன் குடிதண்ணீர் கலந்து 11 வயது குழந்தை ஆபத்தான நிலையில் அட்மிட் செய்துள்ளனர். அந்த குழந்தையை அட்மிட் செய்வதற்காக ரூ.2,000 லஞ்சம் கேட்டுள்ளனர். தமிழ்நாட்டில் உயிருக்கு விலை இல்லை, பணம் மட்டுமே பிரதானமாக உள்ளது.
கள்ளச்சாராயத்தால் தமிழ்நாட்டில் இனி ஒரு மரணம் கூட நிகழக்கூடாது. தற்போது கைது செய்யப்பட்டவர்கள் மீதும், புதிய சட்டம் பாயுமா? கள்ளக்குறிச்சியில் மொத்தமாக ஆளுங்கட்சியின் துணையோடு தான் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறது. இதற்கு முழு பொறுப்பு அமைச்சர் முத்துசாமி.
கனிமொழி தமிழகத்தில் தான் அதிக இளம் விதவைகள் இருக்கின்றார்கள் என்று கூறினார். ஆனால், இப்போது ஏன் பயந்து கொண்டு ஓடுகிறார்? முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி இருந்தபோது முழு மதுவிலக்கு என்று கூறினார். முதலமைச்சர் ஸ்டாலினும் இதே வார்த்தையைக் கூறினார். தற்போது மூன்று வருடம் கடந்து 4 ஆண்டுகளை நோக்கிச் செல்கிறது. எவ்வித நடவடிக்கையும் இல்லை.
நீட் தேர்வு: மாணவர்களின் கருத்தைக் கேட்டு நீட் தேர்வு வேண்டுமா, வேண்டாமா என்பதை கேட்டு ஒரு தெளிவான கருத்தை எடுக்க வேண்டும். இதை வைத்து அரசியல் தான் செய்து கொண்டுள்ளனர். எந்த விதமான தீர்வும் கிடைக்கவில்லை. அடுத்த தேர்தலை நோக்கித்தான் இந்த ஆட்சியாளர்கள் இருக்கிறார்களே தவிர, அடுத்த தலைமுறையை யோசிக்கின்ற கட்சியாக இன்றைக்கு திமுக இல்லை.
40 ஆண்டுகளுக்கு மேலாக மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிப் பணிகளை செய்து வருவது கேப்டன். இன்றைக்கு தவெக தலைவர் விஜய் செய்து வருகிறார். அதற்கு எங்களுடைய வாழ்த்துக்கள். இனிவரும் காலங்களில் அவருடைய செயல்பாடு எப்படி உள்ளது என்பதை பொறுத்து தான் பார்க்க வேண்டும்” இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, நேற்று நடைபெற்ற சட்டப்பேரவையில், “அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகளின் மதுவில் கிக் இல்லை. ஆகவே தான், மக்கள் கிக்குக்காக விட்டில் பூச்சியைப் போல கள்ளச்சாராயம் குடித்து உயிரிழக்கிறார்கள்” என்று அமைச்சர் துரைமுருகன் பேசியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: "அரசு மதுவில் கிக் இல்லை..விட்டில் பூச்சியைப் போல கிக்குக்காக கள்ளச்சாராயம் குடித்து உயிரிழக்கிறார்கள்!" - அமைச்சர் துரைமுருகன்