தஞ்சாவூர்: ஏப்.19ஆம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. மேலும் அனைத்து அரசியல் கட்சியினரும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளையும் ஆக்கிரமித்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, மக்கள் மனதில் இடம் பிடிப்பதற்காகத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் தோசை சுடுவது, பூரி சுடுவது, டீக்கடையில் டீ போடுவது போன்று நூதன செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
தஞ்சை நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில், முரசு சின்னத்தில் போட்டியிடுகிறார் தேமுதிக வேட்பாளர் சிவநேசன். தற்போது, தேமுதிக வேட்பாளர் சிவநேசனுக்கு ஆதரவாக, அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் தஞ்சையை அடுத்த வாண்டையார் இருப்பு உள்ளிட்ட கிராமங்களில் இன்று (திங்கட்கிழமை) வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
முன்னதாக, அப்பகுதியில் உள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் முன்னாள் அமைச்சர் காமராஜ், வேட்பாளர் சிவநேசன் உள்ளிட்டோர் சாமி வழிபாடு செய்து பிரச்சாரத்தைத் துவங்கினர். அதனைத் தொடர்ந்து, அங்குள்ள வீடுகளுக்குச் சென்று துண்டுப் பிரசுரங்களை வழங்கியும், பெரியவர்கள் காலில் விழுந்தும் வேட்பாளர் சிவநேசன் வாக்கு சேகரித்தார். பின்னர், அங்குள்ள இஸ்லாமியர் வீட்டில் ஓட்டு கேட்கச் சென்றபோது, வேட்பாளர் சிவநேசன் அங்கிருந்த கறிக்கடையில் ஆட்டுக்கறியை வெட்டி கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அதைத் தொடர்ந்து, பொதுமக்களிடம் பேண்ட் வாத்தியங்கள் முழங்க வாக்கு சேகரிப்பில் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் ஈடுபட்டனர். இந்த தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக மாவட்டச் செயலாளர் சேகர், அமைப்புச் செயலாளர் காந்தி, தேமுதிக தேர்தல் பொறுப்பாளர் தங்கமணி உள்ளிட்ட அதிமுக கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.