சென்னை: சென்னை பின்னி லிங்க் சாலையில் உள்ள மின்வாரிய தலைமையகத்தின் முன்பாக நடைபெற்ற கேங்மேன் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில், மின்வாரிய ஊழியர்களுக்கு ஆதரவு தெரிவித்து, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கேங்மேன் தொழிலாளர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க வந்திருக்கிறோம். இன்றைக்கு அவர்களின் கோரிக்கை மிகவும் நியாயமான கோரிக்கையாக உள்ளது.
முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்வோம். களப்பணியாளர்களாக பணியமர்த்த வேண்டும். அந்த மாவட்டத்திலேயே அவர்களை பணியமர்த்த வேண்டும். படிக்காத இளைஞர்களுக்கு மிக முக்கியத்துவம் கொடுத்து, அவர்களுக்கும் வேலை வாய்ப்பு கொடுக்க வேண்டும்.
தமிழ்நாடு முழுவதும் திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள வருபவர்களை காவல்துறை தடுக்கிறார்கள். இது ஜனநாயக நாடு தானே, சுதந்திர நாடு தானே? ஒரு தொழிலாளர் அவர்களது கருத்தைச் சொல்வதற்கு உரிமை இருக்கிறது, எதற்கு காவல்துறை அவர்களை தடுக்கிறது?
முதலமைச்சர் இதற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். அதை விட்டுவிட்டு அவர்களை தடுப்பது கண்டனத்துக்குரியது. தேர்தலுக்கு முன்பு ஒரு நிலைப்பாடு. தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு நிலைப்பாடு. இதுதான் திராவிட மாடல் ஆட்சியா? என்று ஒட்டுமொத்த தொழிலாளர்கள் சார்பாக இந்த கேள்வியை முதலமைச்சருக்கு நான் எழுப்புகிறேன்.
தேர்தல் வாக்குறுதி திமுக கொடுத்திருக்கிறது. வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் ஆகியும் எந்த ஒரு கோரிக்கையையும் செவி சாய்க்காமல் உள்ளது. அதனால் தான் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை டிபிஐ வளாகத்தில் பணி நியமனம் கேட்டு ஆர்பாட்டம். மருத்துவமனையில் செவிலியர்கள் ஒரு பக்கம் போராட்டம். எல்லாத் துறையிலும் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது.
இதையெல்லாம் விட்டுவிட்டு 100 ரூபாய் நாணயம் வெளியிடுவதிலும், மகனை துணை முதலமைச்சர் ஆக்குவதிலும் யோசிக்கும் முதலமைச்சர் மக்கள் மீது கவனம் செலுத்த வேண்டும். உண்மையில் மக்களுக்கு எது தேவை என்பதை அறிந்து நிச்சயம் செய்ய வேண்டும்.
தமிழகம் முழுவதும் சாலைகளில் நிலைமை எப்படி இருக்கிறது? இருசக்கர வாகனத்தில் செல்லும்போதும் குண்டும் குழியுமாக யாருமே பயணிக்க முடியாத அளவுக்கு எல்லா சாலையும் மோசமாக உள்ளது. ஒரு பக்கம் மெட்ரோ ரயில் பணிகள், பாதாள சாக்கடை பணிகள், குடிநீர் குழாய் பள்ளங்கள் என எங்கு பார்த்தாலும் குண்டும் குழியுமாக சாலைகள் இருந்தால் எப்படி மக்கள் பயணிப்பார்கள்.
நம்ப மக்கள் மாதிரி உலகத்தில் ஒரு மக்கள் இல்லை. எல்லா கஷ்டத்தையும் ஏற்றுக்கொண்டு இந்த அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றனர். நிச்சயமாக சாலைகளை சரி செய்ய வேண்டும். குடிநீர் பிரச்னை வெயில் காலத்தில் அதிகமாக உள்ளது.
தமிழகம் முழுவதிலும் உள்ள அணைகளில் தண்ணீர் உள்ளது. அதை சேமித்து வைக்க கூடிய எண்ணம் தமிழகத்திற்கு இல்லை. தண்ணீரும் கடலில் சேர்ந்து கலக்கிறது. தொலைநோக்கு திட்டங்கள் இல்லாமல் உள்ளது அரசு. கள்ளச்சாராயம் என்பது முதலில் தப்பு. பிறகு எதற்கு தெருவிக்கு 10 கடைகள் திறந்து வைத்திருக்கிறார்கள். ஒரு பக்கம் டாஸ்மாக் நடத்துவார்கள், கள்ளச்சாராயம் விற்பார்கள், கஞ்சா விற்பார்கள்.
தமிழ்நாட்டை போதை நாடாக மாற்றியது தான் திராவிட மாடல் ஆட்சி என்பதை நிரூபித்திருக்கிறார்கள்.
கள்ளச்சாராயம் என்பது இங்கே குற்றம். அதை ஊக்கப்படுத்தி வருகிறார்கள். கள்ளக்குறிச்சிக்கு போய் பார்க்கும்போது அதை செய்பவர்களை ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் தான். எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் திமுகவில் இருப்பவர்கள் தான் கள்ளச்சாராயத்தை காய்ச்சுகிறார்கள். 10 லட்ச ரூபாய் கொடுக்கிறார்கள்.
மழைக்காலம் தொடங்க உள்ள சூழ்நிலையில் எல்லா சாலையும் சரி செய்ய வேண்டும். மக்கள் வெள்ளத்தில் பாதிக்கப்படக்கூடாது. சாலைகள் பழுதடைந்து உள்ளது. எவ்வளவு பெரிய மழை வந்தாலும், அரசு பார்த்துக் கொள்ளும் என முதலமைச்சர் சொல்கிறார். மழை வந்த பிறகு மக்கள் தான் கஷ்டப்பட போகிறார்கள்.
உங்கள் வீடோ, உங்கள் தலைமைச் செயலகமும், எந்த பிரச்சனையும் வராது மக்கள் நிலையை உணர்ந்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் நேற்று கலைஞர் அவர்களுக்கு 100 ரூபாய் நாணயத்தை இந்த அரசு மத்திய அரசு துணையோடு வெளியிட்டு இருக்கிறார்கள். நூற்றாண்டு காலம் வாழ்ந்த கலைஞருக்கு வாழ்த்துக்களை சொல்றோம்.
அவரின் பணி போற்றக்கூடியது ஆனால் இவர்களுக்கு தேவை என்றால் பாஜகவை அரவணைத்துக் கொள்வார்கள். அரவணை இல்லை என்றால் சங்கி என கூறுவார்கள். நிதி ஆயோக் கூட்டத்திற்கு டெல்லிக்கு போகாமல் புறக்கணித்தார். இப்போது மத்திய அமைச்சரவையை அழைத்து மிக மகிழ்ச்சியாக இருக்கிறேன் என கூறுகிறார்.
இவர்களுக்கு வேண்டுமென்றால் ஒரு நிலைப்பாடு. வேண்டாமென்றால் ஒரு நிலைப்பாடு. நம் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் நியமனத்தில் எந்த அளவுக்கு ஊழல் நடந்திருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். அறப்போர் இயக்கம் மட்டும்தான் அதை வெளியே கொண்டு வருகிறது.
கிருஷ்ணகிரியில் பெண்ணை தாளாளர், பயிற்சியாளர் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள். கொல்கத்தாவில் பயிற்சி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டிருக்கிறார். இதற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். மம்தா பானர்ஜி பேரணி போனது மட்டுமல்லாமல் அந்த குற்றத்தில் சம்பந்தப்பட்டவர்களை தூக்கு தண்டனை வாங்கி தர வேண்டும். இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் தடுக்க வேண்டும்" என தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்