சென்னை: தனியார் மருத்துவமனைகள் தங்களது லாபத்திற்காகவே தேவையில்லாத ரத்த பரிசோதனை, எம்ஆர்ஐ ஸ்கேன் உள்ளிட்டவைகளை அடிக்கடி எடுப்பதாகவும், சிகிச்சைக்குப் பிறகும் இரண்டு நாட்கள் பரிசோதனை என மருத்துவமனையில் தங்க வைப்பதாகவும் திவ்யா சத்யராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.
நடிகர் சத்யராஜின் மகளும் பிரபல ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ் தனது மகிழ்மதி அறக்கட்டளை மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறார். சமீபத்தில் பாஜகவில் இருந்து இவருக்கு அழைப்பு விடுத்திருந்தாகவும் அதனை நிராகரித்துவிட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இவர் தனியார் மருத்துவமனைகள் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் "தனியார் மருத்துவமனைகள் பற்றிய முக்கியமான விஷயத்தை சொல்லவே இந்த வீடியோ. இது என்னுடைய மருத்துவ நண்பர்கள் இடம் இருந்து வந்த தகவல்தான். சில தனியார் மருத்துவமனைகளில் அந்த மருத்துவமனைகளுக்கு லாபம் வரவேண்டும் என்பதற்காக நோயாளிகளுக்கு தேவையில்லாத ரத்த பரிசோதனை, ஸ்கேன்ஸ், எம்ஆர்ஐ இது எல்லாம் எடுக்க வைக்கின்றனர்.
நோயாளிகள் குணமடைந்த பிறகும் இரண்டு நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் வீட்டிற்கு அனுப்புகின்றனர். தனியார் மருத்துவமனைகளுக்கு சென்றால் நோய் குணமாகும் என்ற நம்பிக்கையைவிட பணம் செலவாகும் என்ற பயம்தான் நோயாளிகளுக்கு அதிகமாக உள்ளது.
எங்கள் அமைப்பு மூலமாக, சில நோயாளிகளுக்கு நாங்கள் உதவி செய்தாலும், எல்லா நோயாளிகளுக்கும் உதவி செய்வது என்பது நடைமுறையில் முடியாத காரியம். நோயாளிகள் வருவாய் உருவாக்கும் இயந்திரங்கள் கிடையாது. தனியார் மருத்துவமனைகள் வைத்திருப்பவர்கள், நோயாளிகளை மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி" என அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பாஜக அழைப்பு விடுத்தது உண்மைதான்.. ஆனால் நான்.. திவ்யா சத்யராஜ் பிரத்யேக பேட்டி!